2029க்குள் பஞ்சாப்பில் போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்படும்; அமித் ஷா சூளுரை

லூதியானா: பஞ்சாப்பின் லூதியானாவில் நடந்த விஜயதசமி விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். போதைப்பொருள் வடிவத்தில் உருவாக்கப்பட்ட ராவணனை எரிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அங்கு அவர் பேசியதாவது; நமது பாரம்பரியத்தில் ராவணனை எரிப்பது என்பது, தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை குறிப்பதாகும். விஜயதசமி நாளில் பொறமை, பேராசை, தீய பழக்கங்களை விட்டு விட வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பாக, ராவணனை கடவுள் ராமர் வதம் செய்தார். அது முதல், ராமரின் வெற்றியை தீமைக்கு எதிரான வெற்றியாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் மகன்களை இழந்த பெற்றோரை சந்தித்து பேசினேன். போதைப்பொருள் தடுப்பு ஆர்வலர் பர்வீந்தர் கொலை வழக்கை போல, எஞ்சிய இரு வழக்குகளையும் சிபிஐ வசம் மாநில அரசு ஒப்படைக்க வேண்டும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், மோடி அரசு அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும்.

நக்ஸலிசத்தை ஒழித்ததைப் போல, 2029ம் ஆண்டு டிச., 31க்குள் பஞ்சாப்பில் போதைப்பொருள் புழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement