உழைப்பு மட்டுமே மூலதனமாக கொண்டு அமைச்சரானேன்: விஸ்வநாதன் பெருமிதம்
கடலுார்: உழைப்பு மட்டுமே மூலதனமாக பயன்படுத்தி இன்று உயர்கல்வி அமைச்சராக உயர்ந்துள்ளேன் என்று விஸ்வநாதன் பேசினார்.
கடலுார் பெரியார் கல்லுாரியில் 16–வது பட்டமேற்பு விழா கல்லுாரி வளாகத்தில் இன்று நடந்தது. விஷ்ணுபிரசாத் எம்.பி., மண்டல இணை இயக்குனர் மலர் முன்னிலை வகித்தனர்.
உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் மாணவ மாணவியர்களுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:
முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் ‘கல்சரை’ கற்றுக்கொடுத்தது பெரியார் கல்லுாரிதான். இங்கே இருந்துதான் அந்த எழுச்சி துவங்கியது. சாதாரண ஒரு கிராமத்தில் சைக்கிள் கூட ஓட்ட முடியாத மண் பாதையில் இருந்து இந்த கல்லுாரியை தேர்வு செய்து படிக்க வந்தேன். இன்று உயர்கல்வி அமைச்சராக உயர்ந்து நிற்கிறேன். மாணவர்கள் பிரச்னை, ஆசிரியர்கள் பிரச்னை ஆகியவற்றை கையில் எடுத்து போராட்டம் நடத்தியது என்பது மிகவும் முக்கியமானது.
நான் இன்று அமைச்சராக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து இந்தளவுக்கு உயர்ந்துள்ளேன்.
என் தந்தை வசதி படைத்தவர் இல்லை. அண்ணாமலை பல்கலையில் பி.எச்டி., படிக்க சொன்னார்கள். மறுத்துவிட்டேன். எதிர்காலத்தில் எம்.பி., ஆக வேண்டும் என்பது தான் என் விருப்பம் என்றேன். என்னைப் பார்த்து பேராசிரியர்கள் வியந்து போனார்கள்.
லோக்சபா என்பது ஜாம்பவான்கள் உட்காரும் இடமாயிற்றே என்றார்கள். ஆனால் நான் எப்படயும் லோக்சபாவில் போய் உட்காருவேன் என்று சொன்னேன். அதன்படி லோக்சபா சென்றேன். அதனைத்தொடர்ந்துதான் உயர்கல்வி அமைச்சராக உயர்ந்து உங்கள் முன்பு பட்டம் வழங்குகிறேன். மாணவர்களாகிய நீங்களும் கடுமையாக உழைத்து உயர் பதவிக்கு வர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் தாமரைச்செல்வன், வழக்கறிஞர் சந்திரசேகரன், முன்னாள் மாவட்டத் தலைவர் ரங்கமணி, கலையரசன், மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், ராமராஜ், அருள்பிரகாசம், வேலுசாமி, திலகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.