இந்தியா – நியூசி., தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் திருப்பூர் ஆயத்த ஆடைத்துறைக்கு புதிய வாய்ப்பு
திருப்பூர்: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், 20ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி, பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கக்கூடியதாக இந்த ஒப்பந்தம் உள்ளது.
நம் நாட்டில் இருந்து நியூசி.,க்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளுக்கு, 10 சதவீதம் வரை இறக்குமதி வரி இருந்தது. புதிய ஒப்பந்தம் வாயிலாக, வரிகள் நீக்கப்பட்டுள்ளதால், விலைப் போட்டித் திறனை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை இந்திய நிறுவனங்கள் பெற்றுள்ளன.
புதிய ஒப்பந்தம் ஆயத்த ஆடை நிறுவனங்களுக்குப் புதிய சந்தையை அணுகுவதற்கும், நீண்டகால ஏற்றுமதி வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவும். குறிப்பிட்ட சில நாடுகளின் சந்தைகளை மட்டுமே சார்ந்திருக்கும் நிறுவனங்கள், தங்களது வணிக அபாயங்களைக் குறைப்பதற்காக மாற்றுச் சந்தைகளைத் தேடும் சூழலும் உருவாகியுள்ளது. இத்தகைய சூழலில், நியூசி., – இந்திய ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு ஒரு நல்ல மாற்றுச் சந்தையாக அமையக்கூடும். குறிப்பாக, திருப்பூரைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது ஏற்றுமதிச் சந்தைகளை விரிவுபடுத்த முடியும்.
இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி கூறியதாவது
சரியான நேரம்
சரியான திட்டமிடல், தரமான உற்பத்தி மற்றும் போட்டித்திறன் மிக்க விலை நிர்ணயம் ஆகியவற்றின் வாயிலாக, வரும் காலங்களில் நியூசிலாந்துச் சந்தையில் திருப்பூர் நிறுவனங்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியா – நியூசி. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் பலன்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள நிறுவனங்கள் சர்வதேசத் தரம், சரியான விலை நிர்ணயம், உரிய காலத்தில் பொருட்களை வினியோகித்தல், வாடிக்கையாளருடான தொடர்புகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்திட வேண்டும்.
நியூசிலாந்தின் மக்கள்தொகை மற்றும் அங்குள்ள ஆயத்த ஆடைச் சந்தையின் தேவையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது, இந்த ஒப்பந்தம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். திருப்பூரில் இயங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் டி -ஷர்ட், காட்டன் ஆடை, ஹூடிகள், விளையாட்டு ஆடை உள்ளிட்ட தயாரிப்புகளுக்கான புதிய வாடிக்கையாளரை நியூசிலாந்து நாட்டில் தேடுவதற்கு இது உதவும்.
எனவே, இந்தியா–நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை வெறும் வரிச்சலுகையாக மட்டும் பார்க்காமல், புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குவதற்கும், ஏற்றுமதியைப் பல்வேறு சந்தைகளில் விரிவுபடுத்துவதற்கும், நீண்டகால வர்த்தக வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்குமான ஒரு முக்கிய வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.