காமராஜ் நகர் தொகுதியில் மழைநீரை வெளியேற்ற டீசல் இன்ஜின் தயார்

புதுச்சேரி: மழையால் கடும் விமர்சனம் எழுந்த காமராஜ் நகர் தொகுதியில் தயார் நிலையில் டீசல் இன்ஜின்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கன மழையால் புதுச்சேரி நகரமே தண்ணீரில் தத்தளித்தது. 9.6 செ.மீ., மழைக்கே நகரப் பகுதியில் எங்கு திரும்பினாலும் செல்ல முடியாத அளவிற்கு மழைநீர் சாலையில் வெள்ளமாக ஓடியது.

தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடு, வணிக நிறுவனங்கள் மழைநீரால் பாதிக்கப்பட்டது. மழைக் காலங்களில் எப்போதும் வழக்கம் போல் மழை நீர் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தும் காமராஜர் நகர் தொகுதியில் உள்ள கவிக்குயில் நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகளில் புகுந்த மழை நீரால் எரிச்சலனவர்கள் அப்பகுதி வாசிகள் கொந்தளித்து, தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் உழவர்கரை நகராட்சி, பொதுப்பணித்துறை குறித்து கடுமையான விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த நகராட்சி அதிகாரிகள், உடனடியாக இதற்கு தீர்வு காணும் வகையில், எதிர்வரும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு, செல்லான், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்ற 45 அடி சாலையில் 15 குதிரை திறன் கொண்ட ஒரு டீசல் இன்ஜின், வெங்கடா நகர் அருகில், வள்ளலார் சாலை மற்றும் ஜீவா நகரில் 12 குதிரை திறன் கொண்ட டீசல் இன்ஜின்கள் தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Advertisement