மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் திட்டம் தொடங்கி வைப்பு

1

சென்னை: மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் திட்டத்தை, முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுதும் மழைநீர் சேமிப்பை, மக்கள் இயக்கமாக செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, ஏற்கனவே உள்ள மழைநீர் கட்டமைப்புகளை புதுப்பித்தல், புதிய கட்டமைப்புகளை உருவாக்குதல், நிலத்தடி நீர்வளங்களை பாதுகாத்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் ஆகியவற்றை இலக்காக கொண்டு சிறப்பு இயக்கத்தை முன்னெடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மழைநீர் சேகரிப்பு பணிகளில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள், கல்லுாரிகள், அரசு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு அங்கீகாரம் மற்றும் விருதுகள் வழங்கப்படும்.

இந்த மழைநீர் சேமிப்பு மக்கள் இயக்கத்தை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமையிடத்தில் முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார்.

இதற்காக, 'துளி' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட லோகோவையும் அவர் வெளியிட்டார். 'மழைநீர் சேமிப்பு முக்கியம் மக்களே' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இதைதொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டு உள்ள மழைநீர் சேகரிப்பு மாதிரியையும் முதல்வர் பார்வையிட்டார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெரினா கடற்கரையில், 28 அடி உயரத்தில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தலைமை செயலர் சாய்குமார், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement