தென்னை விவசாயத்துக்கு இரட்டை பாதிப்பு
உடுமலை: வெயில் தாக்கத்தால் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ள நிலையில், கொப்பரை, தேங்காய் விலையும் சரிந்துள்ளதால், தென்னை விவசாயிகள் இரட்டை பாதிப்பை சந்தித்துள்ளனர். எனவே, கொப்பரை கொள்முதலை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் அதிகளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்ததால் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டமும், நிலத்தடி நீர்மட்டமும் சரிந்துள்ளன.
இதனால் வழக்கமாக, 60 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் தேங்காய் பறிப்பு, தற்போது நான்கு மாதங்களுக்கு ஒரு முறையே நடைபெறுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தென்னை விவசாயிகள் சங்கம், திருப்பூர் மாவட்ட செயலாளர் பரமசிவம் கூறியதாவது :
வறட்சி, நோய்த்தாக்குதல் மற்றும் வெயில் தாக்கத்தால் குரும்பைகள் உதிர்ந்து தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது.
வெளிச்சந்தையில் கிலோ ரூ.220 வரை இருந்த கொப்பரை விலை, தற்போது, ரூ.154 முதல், 158 ஆகவும், டன், ரூ.72 ஆயிரமாக இருந்தது. தற்போது, தரத்திற்கு ஏற்ப, ரூ.54 ஆயிரம் முதல், 58 ஆயிரம் ரூபாயாக சரிந்துள்ளது. இதனால் விளைச்சல் குறைவு, விலை வீழ்ச்சி என விவசாயிகளுக்கு இரட்டை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமராவதி உள்ளிட்ட அணைகளிலும், பி.ஏ.பி. தொகுப்பிலும் போதிய தண்ணீர் இல்லாததால் தென்னை விவசாயம் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
கொப்பரைக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் மட்டை உரிக்காத தேங்காய்களை இருப்பு வைத்துள்ளனர். ஆனால், எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை.
மத்திய, மாநில அரசுகள் ‘நாபெட்’ வாயிலாக கொப்பரை கொள்முதலை மீண்டும் தொடங்க வேண்டும். கிலோவுக்கு, குறைந்த பட்ச ஆதரவு விலையாக ரூ. 180 நிர்ணயிக்க வேண்டும்.
ஏக்கருக்கு, 200 கிலோ வரை மட்டுமே என்ற உச்சவரம்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளைத் தவிர்த்து, விவசாயிகளிடம் இருப்பில் உள்ள கொப்பரை முழுவதையும், ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும்.
வறட்சியிலிருந்து தென்னை விவசாயத்தைக் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தார்.