வேண்டுமென்றே லாரியை ஏற்றி இருவரை கொன்ற டிரைவர் கைது

மங்களூரு: போளியாரு அருகில், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முன் நடந்த சாலை விபத்தில், இருவர் இறந்த சம்பவத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த லாரியின் டிரைவர் வேண்டுமென்றே இருவர் மீது லாரியால் மோதியது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுதீர் குமார் ரெட்டி அளித்த பேட்டி:

மங்களூரு போளியாரு அருகில், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முன், கடந்த அக்டோபர் 19ம் தேதி, ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில், உல்லால் தாலுகாவின், உக்குடா கிராமத்தை சேர்ந்த முகமது ஜுனைத், 24, அவரது பக்கத்து வீட்டில் வசித்த முகமது அப்ராஜ், 23, உயிரிழந்தனர்.

ஆரம்பத்தில் இது விபத்து என, கருதப்பட்டது. ஆனால், இது திட்டமிட்ட கொலை என, முகமது ஜுனைத்தின் தந்தை இஸ்மாயில் புகார் அளித்துள்ளார்.

முகமது ஜுனைத், கல்லாபுவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலி வேலை செய்கிறார். சம்பவ நாளன்று மதியம், இவர் தன் நண்பர் முகமது அப்ராஜுடன் ஸ்கூட்டரில் செல்லும் போது, ஏதோ காரணத்தால் இவர்களுக்கும், லாரி ஓட்டுநர் ஹபீஜ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இ தனால் கோபத்தில் இருந்த ஹபீஜ், அன்று மாலை நண்பர்கள் ஸ்கூட்டரில் செல்வதை பார்த்து, தன் லாரியில் பின் தொடர்ந்து சென்று, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முன், ஸ்கூட்டர் மீது அதிவேகமாக, தான் ஓட்டி வந்த லாரியை மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருவரும், மருத்துவமனையில் இறந்தனர் என, புகாரில் விவரிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த பலரிடம் விசாரித்த போது, கிடைத்த தகவலின் அடிப்படையில், இது கொலையாக இருக்க வாய்ப்புள்ளது. ஹபீஜை கைது செய்துள்ளோம். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement