பா.ஜ.,வில் அமைப்பு பொதுச்செயலருக்கு பதிலாக புதிய பதவியை உருவாக்க முடிவு
சென்னை: தமிழக பா.ஜ.,வில், அமைப்பு பொதுச்செயலர் பதவிக்கு பதிலாக, தலைமை அலுவலக பொதுச்செயலர் என்ற புதிய பதவியை உருவாக்க, அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.,வில் அமைப்பு பொதுச்செயலர் பதவிக்கு, தலைவருக்கு இணையான அதிகாரம் உண்டு. முழு நேர ஆர்.எஸ்.எஸ்., ஊழியராக இருப்பவர்களே, இப்பதவிக்கு வர முடியும். கடந்த 2015ல் இருந்து 2026 வரை, தமிழக பா.ஜ., அமைப்பு பொதுச்செயலராக கேசவ விநாயகன் இருந்தார். பின், வேறு யாரும் நியமிக்கப்படவில்லை.
சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின், பா.ஜ.,வில் இருந்து விலகிய அண்ணாமலையுடன், கட்சி நிர்வாகிகள் பலர் சென்றதால், நெருக்கடியான நிலையில் கட்சி உள்ளது. அமைப்பு பொதுச்செயலர் இருந்தவரை, அவரிடம் மாவட்ட தலைவர்கள் மற்றும் அணிகளின் மாநில நிர்வாகிகள், பிரச்னைகளை சொல்ல வாய்ப்பு இருந்தது.
எனவே, தமிழக பா.ஜ.,வில், அமைப்பு பொதுச்செயலரை நியமிக்குமாறு, தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷிடம் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், பொருத்தமானவரை அனுப்ப, ஆர்.எஸ்.எஸ்., மறுப்பதால், தலைமை அலுவலக பொதுச்செயலர் என்ற பதவியை உருவாக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.
பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்., பணிகளை கவனிக்க, அனுபவமும், திறமையும் வாய்ந்த முழுநேர ஊழியர்கள் குறைவாக உள்ளதாக கூறி, அமைப்பு பொதுச்செயலர் பதவிக்கு பொருத்தமானவரை அனுப்ப, ஆர்.எஸ்.எஸ்., தாமதித்து வருகிறது.
மாநில அமைப்பு பொதுச்செயலரை, மாவட்ட தலைவர்கள் எந்நேரமும் சந்தித்து, கோரிக்கை ஏற்கப்படுகிறதோ இல்லையோ, மனம் விட்டு பேச முடியும். அமைப்பு பொதுச்செயலர், பயணத்திலேயே இருப்பதால், மாவட்டங்களில், கட்சி நிர்வாகிகள் மட்டுமன்றி, தொண்டர்களும் அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு இருந்தது.
இப்போது, அந்த வாய்ப்பு இல்லாததால், கட்சி பணிகள் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.,வில், தேசிய தலைமை அலுவலக பொதுச்செயலர் பதவி உள்ளது. அதுபோல தமிழகத்திலும் நியமிக்க, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
இன்ஸ்டா ரீல்ஸால் வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள்: தொடரும் பழிக்குப்பழி
-
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளில் மாற்றம்: தேர்ச்சி மதிப்பெண் 75% ஆக உயர்த்த திட்டம்
-
பெருந்துறை தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கும் முன்னாள் அமைச்சர்கள்?
-
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் தருவதாக ரூ.300 கோடி முறைகேடு; மாஜி அமைச்சர் மனைவிக்கு சிக்கல்
-
12வது மாடி ஜன்னலில் இருந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'