தான்தோன்றிமலை கோவில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரத்துவங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி
கரூர்:மழை
காரணமாக, கரூர் தான்தோன்றிமலை கோவில் தெப்பக்குளத்திற்கு, நீர்
வரத்து தொடங்கி உள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கரூர்
தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில், குடவறை கோவிலாக
அமைந்துள்ளது. புரட்டாசி பெருந்திருவிழா உள்ளிட்ட முக்கிய விசேஷ
நாட்களில் கரூர் மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், திருச்சி,
திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்
வருகை தந்து சுவாமியை தரிசனம் செய்வர். கோவில் வளாகத்தின் முன்புறம்
பிரசித்தி பெற்ற தெப்பக்குளம் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் மாசிமக
விழாவின் போது, கல்யாண வெங்கடரமண சுவாமி தாயார்களுடன் சர்வ
அலங்காரத்தில் எழுந்தருளி, தெப்பக்குளத்தில் வலம் வரும் கண்கொள்ளா
காட்சியான 'தெப்ப உற்சவம்' வெகு விமரிசையாக நடக்கும். பொதுவாக,
கோவில் குளங்களில் நீர் நிரம்பி, அதில் தாமரை, அல்லி போன்ற மலர்கள்
பூத்துக் குலுங்குவதும், துள்ளி விளையாடும் மீன்களுக்கு மாலை வேளையில்
படிகளில் அமர்ந்து பக்தர்கள் பொரி மற்றும் உணவு வழங்கி மகிழ்வதும் மன
அமைதி தரும் பாரம்பரிய ஆன்மீக நிகழ்வாகும்.
இந்நிலையில், கடந்த
கோடை காலம் மற்றும் பருவமழை தவறிய காரணத்தால், கடந்த, 5
மாதங்களுக்கும் மேலாக தெப்பக்குளம், சொட்டு நீரின்றி முற்றிலும்
வறண்டு காணப்பட்டது. இதனால் குளத்தில் புல் பூண்டுகள் முளைத்து
பொலிவிழந்து காட்சியளித்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வறண்ட
குளத்தை பார்த்து வேதனையுடன் கடந்து சென்றனர்.
இந்நிலையில், வடகிழக்கு
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் சுற்றுவட்டார
பகுதிகளில், கடந்த சில தினங்களாக கனமழை பரவலாக பெய்து வருகிறது.
மழை நீரின் தொடர் வரத்து காரணமாக, நீண்ட நாட்களாக வறண்டு கிடந்த
தான்தோன்றிமலை தெப்பக்குளத்திற்கு தற்போது மழைநீர் வர
தொடங்கியுள்ளது.
மழைக் காலம் முழுமையாக முடிவதற்குள்
தெப்பக்குளத்தை முறையாக துார்வாரி, முழு கொள்ளளவையும் தேக்கி வைக்க
ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடியுடன் போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் சந்திப்பு
-
தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடலை பாடிய கிருஷ்ணராஜ் காலமானார்
-
கரப்பான் கும்பலுக்கு டில்லி குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன்
-
முருகன் ராஜினாமா; காலியான எம்பி பதவிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் கமிஷன்
-
இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கு; சக யூடியூபர் கைது
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது