கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; மண் சரிவால் ரயில் சேவை பாதிப்பு

-நமது நிருபர்-




கன்னியாகுமரி, கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குமரி-கேரள எல்லை பகுதியான பாறசாலை அருகே இன்று (அக் 22) அதிகாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. கன்னியாகுமரி களியக்காவிளை பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிந்தது. அங்கு வந்த பிலாஸ்பூர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் இதில் சிக்கி தடம் புரண்டது. பயணிகள் மாற்று ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

பல ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ், மங்களூர் சென்ட்ரல் - கன்னியாகுமரி பரசுராம் எக்ஸ்பிரஸ் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. கன்னியாகுமரியில் இருந்து காலை புறப்பட வேண்டிய ரயில்கள் தாமதமாகின. ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.




ஆரஞ்சு அலெர்ட்

கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Advertisement