பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டம்(Tag) சாலையோர வியாபாரிகளுக்கு 7 சதவீத வட்டி மானியத்துடன் ரூ.50,000 வரை கடன்
சாலையோர வியாபாரிகள் தங்கள் தொழிலை தொடர்ந்து நடத்தவும், விரிவுபடுத்தவும் தேவையான நடைமுறை மூலதனத்தை பெறுவதற்காக, மத்திய அரசின் ‘பிரதம மந்திரி ஸ்வநிதி’ திட்டத்தின் கீழ் பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. மறுசீரமைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கடன் வழங்கும் காலம் 2030 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு பயன்?
சாலையோரங்களில் காய்கறி, பழங்கள், பூக்கள், உணவு பொருட்கள், துணிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வோர், நடமாடும் விற்பனையாளர்கள் மற்றும் திட்ட விதிகளின்படி தகுதியுடைய பிற சாலையோர வியாபாரிகள் பயன்பெறலாம்.
கூடுதல் சலுகைகள்
*கடன் பெற சொத்து பிணையம் தேவையில்லை
*டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு ரூ.1,600 வரை ஊக்கத்தொகை பெறலாம்
*தகுதியுள்ள வியாபாரிகளுக்கு ரூ.30,000 வரை கடன் வரம்புடன் யு.பி.ஐ., இணைக்கப்பட்ட ‘ரூபே கிரெடிட் கார்டு’ வசதி கிடைக்கும்
*தொழில்முனைவு, நிதி அறிவு, டிஜிட்டல் திறன் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன
யார் விண்ணப்பிக்கலாம்?
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பால் வழங்கப்பட்ட வியாபார சான்றிதழ், அடையாள அட்டை அல்லது திட்ட விதிகளின்படி தேவையான பரிந்துரை ஆவணங்களை வைத்துள்ள தகுதியான சாலையோர வியாபாரிகள் விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் திட்டத்தில் இணைந்த வங்கிகள், நிதி நிறுவனங்களையும் அணுகலாம்.
கவனிக்க
இது நேரடி மானியம் அல்ல. கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும். ஆனால், உரிய காலத்தில் செலுத்துவோருக்கு 7 சதவீத வட்டி மானியம் மற்றும் அடுத்த கட்ட அதிக கடன் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
இணையதளம்: pmsvanidhi.mohua.gov.in
திட்ட காலம்: மார்ச் 31, 2030 வரை
மேலும் விபரங்களுக்கு கியு.ஆர். கோடை ஸ்கேன் செய்யவும்.
எவ்வளவு கடன்?
*முதல் தவணை : ரூ.15,000 வரை
*இரண்டாவது தவணை : ரூ.25,000 வரை
*மூன்றாவது தவணை : ரூ.50,000 வரை
முந்தைய கடனை முறையாக திருப்பி செலுத்தியவர்கள், அடுத்த கட்ட கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது.