மானாமதுரையில் ரயில்வே இடத்தில் கற்கள் ஊன்றும் பணி தீவிரம்

மானாமதுரை: மானாமதுரையில் ரயில்வேக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்து கற்கள் ஊன்றும் பணி நடைபெற்று வருகிறது.

மானாமதுரை வழியாக பல்வேறு ஊர்களுக்கு தினமும் ரயில்கள் ஏராளமாக செல்கின்றன. பல்வேறு மாநிலங்களுக்கு விறகு கரி மற்றும் நெல்,அரிசி, சிமென்ட், உரம் உள்ளிட்டவைகளும் சரக்கு ரயில் மூலம் பல்வேறு ஊர்களுக்கு செல்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த மானாமதுரை ரயில்வே ஜங்ஷனை அம்ருத் திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மானாமதுரை ரயில்வே ஜங்ஷனுக்கு ஆய்வுக்கு வந்த தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் ரயில்வேக்கு சொந்தமான இடங்களை பார்வையிட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மூத்த பொறியாளர் ஸ்ரீதர் தலைமையிலான ஊழியர்கள் நேற்று ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., வசந்தி தலைமையில் ஸ்டேஷன் வளாகம் மற்றும் அண்ணா நகர், பழைய பஸ் ஸ்டாண்ட்,ஆனந்தபுரம் பைபாஸ் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் சர்வே செய்து அளவீடு கற்களை ஊன்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் சிலர் அப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisement