வெளிநாட்டு தலைவருடன் சந்திப்பை விமர்சித்த ராகுல்; இந்திராவை உதாரணமாக காட்டி ஜெய்சங்கர் பதிலடி

16

- நமது சிறப்பு நிருபர் -

இந்தியாவுக்கு அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வந்தார். அவரை மும்பையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். சந்திப்பை, ''சம்மன்'' என்று காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் விமர்சித்து இருந்தார். தனியார் செய்தி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் ராகுலுக்கு ஜெய்சங்கர் பதிலடி கொடுத்தார்.

டில்லிக்கு வெளியே தலைவர்கள் சந்திப்பது வழக்கமானது தான் என்று கூறி, முன்னாள் பிரதமர் இந்திராவை ஜெய்சங்கர் உதாரணமாகக் காட்டினார். அவர் பேசியதாவது: அவர்களுக்கு (காங்கிரஸ்) மும்பையைப் பிடிக்கவில்லை. மும்பை மீது ஏதோ ஒரு விரோதம் இருக்கிறது. நமது நிதித் தலைநகரம்; பாலிவுட் தலைநகரம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. டில்லிக்கு வெளியே தலைவர்கள் சந்திப்பது வழக்கமானது தான்.

முன்னாள் தலைவர்கள் ஒரு வெளிநாட்டுத் தலைவரைச் சந்திப்பதற்காக டில்லியை விட்டு வெளியே பயணம் செய்த பல உதாரணங்களைத் தன்னால் பட்டியலிட முடியும். 1972ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக, பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவை முன்னாள் பிரதமர் இந்திரா டில்லிக்கு வெளியே உள்ள சிம்லாவில் சந்தித்தார். அப்படி என்றால், அப்போது இந்திராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டதா?

2013ல் மன்மோகன் சிங் அரசில் அமைச்சராக இருந்த சல்மான் குர்ஷித், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் ராஜா பெர்வேஸ் அஷ்ரப்பிற்கு ஜெய்ப்பூரில் சந்தித்து மதிய விருந்து அளித்தார். ஒரு வெளிநாட்டுத் தலைவரை சந்திப்பதற்காக டில்லியை விட்டு வெளியே செல்வது சம்மன் விடுப்பது என்றால், என்னால் ராகுலுக்கு நிறைய உதாரணங்கள் தர முடியும். நாம் பெரியவர்கள், முதிர்ச்சியுடன் பேசிக்கொள்வோம். இங்கிருந்து கிளம்பலாம், என ராகுலை ஜெய்சங்கர் கடுமையாக சாடி பேசினார்.

Advertisement