மீண்டும் பாஜ கூட்டணியில் சிரோமணி அகாலி தளம்; சுக்பூர் சிங் பாதல் சூசகம்

சண்டிகர்: பஞ்சாப்பில் போதைப்பொருள் தடுப்பு ஆர்வலர் பர்விந்தர் சிங் கொலை செய்யப்பட்டது குறித்து கவர்னர் குலாப் சந்த் கட்டாரியாவை, சிரோமணி அகாலி தளம் கட்சியின் சுக்பீர் சிங் பாதல் சந்தித்தார். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தினார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய இருப்பதை அவர் சூசகமாக அறிவித்துள்ளார்.

ஆம்ஆத்மி, காங்கிரஸ் அரசியலின் முக்கிய எதிரிகள் என்று குறிப்பிட்டார். பாஜவின் பெயரை குறிப்பிடாத அவர், பஞ்சாப்பின் வளர்ச்சிக்கு ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பாஜவுடன் அகாலி தளம் நீண்ட ஆண்டுகளாக கூட்டணி அமைத்து இருந்தன. விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2020ல் கூட்டணி முறிந்தது. அடுத்த ஆண்டு ஜனவரியில் பஞ்சாப் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

கடந்த தேர்தல்களில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டதால் பின்னடைவைச் சந்தித்தன. தற்போது மீண்டும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை எழுந்துள்ளது.

Advertisement