பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய உத்தரவு

சூலூர்:

வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக, பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மையை உடனடியாக ஆய்வு செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவு விபரம் :

தற்போது, வடகிழக்கு பருவமழை காலம் என்பதாலும், பாதிப்புகளை முன்கூட்டியே தடுத்து, கட்டட பராமரிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

பள்ளி கட்டடங்கள், சுற்றுச்சுவர், மேற்கூரைகள், திறந்த நிலை அமைப்புகள், வளாகங்கள் ஆகியவற்றில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து கட்டடங்களின் மேற்கூரைகளின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். மொட்டைமாடி மற்றும் மேற்கூரையில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் குழாய்களை சுத்தப்படுத்த வேண்டும்.

கைப்பிடி சுவர், சன்ஷேடு ஆகியவற்றில் விரிசல் உள்ளதா அல்லது பலவீனமாக உள்ளதா என ஆய்வு செய்து, உடனடியாக பழுது நீக்க வேண்டும். மேல்நிலை குடிநீர் தொட்டி, சின்டெக்ஸ் தொட்டிகளின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். கட்டட பராமரிப்பில் ஏதேனும் குறைபாடோ அல்லது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என கண்டறியப் பட்டால், மாற்று ஏற்பாடுகளை தாமதமின்றி செய்ய வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement