பச்சிளம் பெண் குழந்தை ரயிலில் மீட்பு

சேலம்: கன்னியாகுமரி - புனே எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று (அக்.,22) இரவு, 11:00 மணிக்கு சேலத்தை கடந்து, மொம்மிடி நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது பொதுப்பெட்டியில், ஒரு மாதமே ஆன பெண் குழந்தை, தனியே இருப்பதாக, கட்டுப்பாடு அறைக்கு தகவல் கிடைத்தது.

மொம்மிடி ஸ்டேஷனில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், குழந்தையை மீட்டு, சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். குழந்தைகளுக்கான 'பெட், பேபி பவுடர், டயபர்' உள்ளிட்டவை இருந்ததால், தாயே விட்டுச் சென்றிருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது.

அத்துடன், குழந்தை இருப்பதாக தகவல் கொடுத்தவரே விட்டுச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர். அந்த ரயில் வந்த தடமான சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களிடம், குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

Advertisement