இன்ஜினியரிங் படிக்காதவர் உருவாக்கினார் பறக்கும் கார்

3

உத்தரகண்ட் மாநிலம் அல்மோராவை சேர்ந்த ரவி தம்டா, இன்ஜினியரிங் படிக்கவில்லை. கலைப்பிரிவில் பட்டம் பெற்றவர், 13 ஆண்டாக இணையத்தில், தான் பார்த்து, அறிந்தவற்றை பயன்படுத்தி பறக்கும் கார் உருவாக்கியுள்ளார். அவர் தயாரித்துள்ள ஒரு நபர் மட்டும் பறக்கும் கார், ரன்வே இல்லாத இடங்களிலும் செங்குத்தாக தரை இறங்கும்; தரையில் இருந்து அப்படியே வானில் மேலே எழும்பி பறக்கும்.

விமான எரிபொருளோ, எத்தனாலோ இதற்கு தேவையில்லை; பேட்டரி மட்டுமே போதுமானது. தான் உருவாக்கிய பறக்கும் காரை, பலர் முன்னிலையில் இயக்கி காட்டி சாதனை படைத்த தம்டா, இன்னும் முறைப்படியான அரசு அனுமதிகளை பெற வேண்டியுள்ளது. 'பட்டம் என்பது அடிப்படையான விஷயங்களை அறிந்து கொள்வதற்கு மட்டுமே; சுய முயற்சியால் பிறவற்றை கற்றுக்கொள்ள முடியும்' என்பதை உணர்த்தியுள்ளார்.

பெண் டாக்டரை தாக்கிய கைதி; மருத்துவ துறையில் கொந்தளிப்பு



மஹா., மாநிலம் வார்தா போலீசார், கைது செய்த ஒருவரை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். பெண் டாக்டர் பணியில் இருந்தார். பரிசோதனை முடிந்து, டாக்டர் தன் அறிக்கையை எழுதி கையெழுத்திட்ட பின், கைதியை கையெழுத்திடும்படி கூறினார். அவரும் கையெழுத்து போட்டார். என்ன நினைத்தாரோ, அடுத்த வினாடியே, பெண் டாக்டரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார். போலீசார் அசட்டையாக இருந்த நேரத்தில் இப்படி ஒரு வேலையை பார்த்து விட்டார், அந்த கைதி.

Latest Tamil News
அதிர்ச்சி அடைந்த போலீசார், கைதியை பிடித்து வெளியே இழுத்துச்சென்றனர். இந்த சம்பவம், இணையத்தில் பரவி, டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுழன்று ஆடிய நடனம்; 'சூப்பர்ஹிட்' ஆன சிறுவன்



இன்ஸ்டாகிராம் பயனர் திவ்யா மானே வெளியிட்ட அந்த வீடியோவில், ஒரு சிறுவன் சுழன்று சுழன்று ஆடுகிறான். மராத்தி பாடலான 'அப்சரா ஆலி'யின் இசைக்கு தகுந்தபடி ஆடும் சிறுவனின் அட்டகாசமான நடனம், இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது. சிறுவனின் ஒவ்வொரு நடன அசைவும், முக பாவனைகளும் பாராட்டும்படி இருந்தன.

Latest Tamil News
மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆடும் அந்த சிறுவனை சுற்றி நின்றபடி ஏராளமான பேர் ஆர்வத்துடன் ரசிக்கின்றனர். கூடவே சிறுவர்கள் ஆடுகின்றனர். பலர் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். 'இந்த சிறுவனின் ரத்தத்தில் கலையும் சேர்ந்திருக்கிறது' என்று வீடியோவுக்கு தலைப்பிட்டுள்ளார், திவ்யா மானே. 'அப்சரா ஆலி' பாடல், 2013ல் வெளியான மராத்தி திரைப்படமான 'நடரங்' படத்தில் இடம் பெற்றது.

எங்க ஊருக்கு ரோடு போடுங்க; முதல்வரை கேட்கிறார் மணப்பெண்



உத்தரகண்ட் மாநிலம் சக்ரதாவை சேர்ந்த இளம்பெண் ஷர்மிளாவுக்கு அன்று தான் திருமணம். மாப்பிள்ளை வீடு, உந்தவா கிராமத்தில் அமைந்துள்ளது. அங்கு செல்வதற்கு, 18 கி.மீ., கரடு முரடான மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். திருமண உடையான லெஹங்கா அணிந்து தயாரான ஷர்மிளா, முகூர்த்த நேரம் முடிவதற்குள் சென்று விட வேண்டும் என்பதற்காக, ஓட்டமும் நடையுமாக மலைப்பாதையில் சென்றார். அப்படி செல்லும்போதே, மாநில முதல்வருக்கு வீடியோவில் ஒரு வேண்டுகோளும் விடுத்தார்.

Latest Tamil News
'நான் திருமணமாகி செல்லும் கிராமத்துக்கு சாலை வசதியில்லை; மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதை செய்து கொடுங்க' என்பது அவரது வேண்டுகோள். வீடியோவும் வேகமாக பரவி வருகிறது. மணப்பெண் புண்ணியத்தில், சாலை வசதி கிடைத்தால் நல்லது தான் என்கின்றனர், கிராம மக்கள்.

பனிப்பாறையில் இருந்து 'டைவ்' அடித்த மாலி



Latest Tamil News
கனடாவை சேர்ந்த சாகச விளையாட்டு ஆர்வலரான மாலி கார்ல்சன், அட்லான்டிக் பெருங்கடலின் பனி உறைந்த பகுதிக்கு சென்றார். அங்கு பனிப்பாறை ஒன்றின் உச்சிக்கு சென்றவர், அங்கிருந்து சில்லிடும் கடல் நீரில் குதிக்க முடிவு செய்தார். 'பனிமலை குன்றின் உச்சியில் இருந்து குதிக்கும் முதல் பெண் நான் தான்' என்று கூறியவர், பின்னால் திரும்பி நின்றபடி தலைகீழாக டைவ் அடித்து தண்ணீரில் குதித்தார். 'பனிமலை குன்றுகள் மிகவும் ஆபத்தானவை. என் வாழ்க்கையிலேயே நான் செய்த அபாயகரமான செயல் இதுதான்' என்கிறார், அவர். அவரது வீடியோ, வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Advertisement