கட்டாமல் விடப்பட்ட 31,000 வீடுகள்: ரூ.100 கோடியை வசூலிக்க அரசு திணறல்

- நமது நிருபர் -

மத்திய அரசின் விலையில்லா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்பட்டும், இதுவரை, 31 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை.

நாடு முழுதும் ஊரக பகுதிகளில் வீடு இல்லாதவர்களுக்கு, 'பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின்' என்ற திட்டம் வழியே, வீடு கட்ட நிதி வழங்கப்படுகிறது. இத்திட்டம் 2016 முதல், தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. ஒரு வீட்டிற்கு, 1.20 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், 40 சதவீதம், அதாவது, 48 ஆயிரம் ரூபாயை, தமிழக அரசு வழங்குகிறது. மீதியை மத்திய அரசு வழங்குகிறது.

இத்திட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 75 ஆயிரத்து 751 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எனினும், கடந்த பத்தாண்டில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளன. வீடு கட்ட வழங்கிய பணமும் திரும்ப வரவில்லை.

இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட பின், முதற்கட்டமாக 26 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்படும். அதற்கான பணிகள் முடிந்த பின், அடுத்த கட்ட பணிகளுக்கான தொகையை அரசு வழங்கும். அந்த வகையில், ஓர் ஆண்டுக்குள் வீட்டை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், வீட்டை கட்டி முடிக்கவில்லை என்றால், அரசு வழங்கிய தொகையை திரும்ப அளிக்க வேண்டும்.

அதன்படி, தமிழகத்தில் பல ஆண்டுகள் ஆகியும், 31 ஆயிரம் பயனாளிகளுக்கு, பல்வேறு கட்டமாக நிதி வழங்கியும், இன்னும் வீடு கட்டி முடிக்கவில்லை. அந்த வகையில், வீடு கட்டி முடிக்காதவர்களிடம் இருந்து, 100 கோடி ரூபாய் அரசுக்கு திரும்பி வர வேண்டும். ஆனால், அந்தத் தொகையை பயனாளிகளிடம் இருந்து திரும்ப வாங்க முடியாமல், ஊரக பணியாளர்கள் திணறி வருகின்றனர்.

அரசு வழங்கும் நிதி போதாததால், வீட்டை கட்டி முடிக்க முடியவில்லை என்று பயனாளிகள் கூறுகின்றனர். அப்படி இருக்கும் போது, கொடுத்த பணத்தை எப்படி வசூலிக்க முடியும் என, பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிதி பல ஆண்டுகளாக அரசுக்கு திரும்பி வராமல், பயனாளி வீட்டை கட்டி முடிக்காமல், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் உள்ளது.

த.வெ.க., ஆட்சிக்கு வந்தபின், தமிழக அரசின் வீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை, 3.50 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசின் திட்டத்தில், வீடு பெற விண்ணப்பம் குறைந்து விட்டது. ஆண்டு இலக்கை, 70 ஆயிரம் ஆக குறைத்த த.வெ.க., அரசு, ஐந்தாண்டுகளில் 5 லட்சம் வீடு என, இலக்கை அதிகப்படுத்தி உள்ளது. தமிழகத்தைபோல, மத்திய அரசும், வீடு கட்ட கூடுதல் நிதி வழங்கினால்தான், மத்திய திட்டத்தை செயல்படுத்த முடியும் என்ற நிலை வந்துவிட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement