தேர்தல் நெருங்குவதால் டிரம்ப் பல்டி: கனடா இறக்குமதி மீதான வரிகள் திடீர் குறைப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பொருட்களுக்கான வரியை அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அதிரடியாக குறைத்துள்ளது.
அமெரிக்காவில் விரைவில் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் குடியரசுக் கட்சிக்கும், ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக, கனடா எல்லைப் பகுதியான மெய்ன் மாகாணத்தில், குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டிரம்ப் தொடர்ச்சியாக நடத்தி வந்த வர்த்தகப் போரினால், எல்லைப் பகுதி விவசாயிகளும், தொழிலதிபர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.
விலக்கு பெற்ற பொருட்கள்:
இந்நிலையில், செனட்டர் சூசன் காலின்ஸ் விடுத்த தொடர் கோரிக்கையை ஏற்று, கனடா மீதான சில வரிகளை டிரம்ப் நிர்வாகம் குறைத்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை: பிளைவுட் ஷீட்டுகள், சில காகிதத் தயாரிப்புகள், குறிப்பிட்ட தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் குளிரூட்டும் சாதனங்கள் ஆகியவற்றுக்கு வரிகளில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளர்வுகள் மூலம் ஆப்பிள், உருளைக்கிழங்கு, புளூபெர்ரி உள்ளிட்ட விவசாயத் துறைக்குத் தேவையான உபகரணங்களை எளிதாகப் பெற முடியும்.
புதிய வரி சிக்கல்:
ஒருபுறம் சில பொருட்களுக்கு வரி விலக்கு அளித்தாலும், மறுபுறம் தரைவிரிப்புகள், குறிப்பிட்ட வால்வுகள் மற்றும் கழிவுப் பொருட்கள் மீது புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகள் அக்.,30 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
பின்னணி என்ன?
கனடாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சுமார் 70 சதவீதம் அமெரிக்காவைச் சார்ந்தே உள்ளது. டிரம்ப் விதித்த கடுமையான வர்த்தகக் கட்டுப்பாடுகளால் கனடா பொருளாதாரம் கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், சொந்தக் கட்சியின் தேர்தல் வெற்றியை மனதில் வைத்து டிரம்ப் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக வாஷிங்டன் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.