சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா விஜய்: செல்லுார் ராஜூ கேள்வி

மதுரை: ‘‘அரசு ஊழியர்கள் கருத்து கூறக்கூடாது என்று கூறுவதன்மூலம் அவர்களது கருத்து சுதந்திரத்தை பறிக்கக்கூடிய சர்வாதிகாரியாக முதல்வர் விஜய் மாறிவிட்டாரா’’ என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கேள்வி எழுப்பினார்.

மதுரையில் அவர் கூறியதாவது:

த.வெ.க.,வின் தற்காலிக வெற்றியால் தற்குறி அரசாக மாறியிருக்கிறது. ஆறு மாதம் ஆகிவிட்டது. புதுமையாக எதுவும் செய்யவில்லை. அரசு ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசு குறித்து அவர்கள் கருத்து கூறக்கூடாது என்று கூறுவதன்மூலம் அவர்களது கருத்து சுதந்திரத்தை பறிக்கக்கூடிய சர்வாதிகாரியாக முதல்வர் விஜய் மாறிவிட்டாரா. கடந்த ஆட்சியில் என்ன நடந்ததோ அதேதான் தொடர்கிறது.

காவிரி நீர் பிரச்னையில் கவனம் செலுத்தாத முதல்வர், ஆந்திராவிற்கு ஏன் சென்றார் என்று தெரியவில்லை. தமிழக காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மிகப்பெரிய துன்பத்தில் இருக்கிறார்கள்.

காவிரி பிரச்னையில் ராகுல் மூலம் கர்நாடக முதல்வரிடம் சொல்லி குறைந்தபட்சம் 15 டி.எம்.சி. தண்ணீரையாவது பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதைக்கூட செய்ய முடியாத முதல்வராக விஜய் உள்ளார். சென்னையிலேயே மழைநீர் தேங்கி கொண்டு தான் உள்ளது. அதற்கு ‘இன்னும் 6 மாதம் காலம் கொடுங்கள். அதற்குள் மழைநீர் வடிகால்களை சீர்படுத்தி விடுவோம்’ என்கிறார் ஒரு அமைச்சர். அரசின் இயலாமையை அவரே ஒத்துக் கொண்டுள்ளார். இவ்வாறு கூறினார்.

Advertisement