பன்றிக்கு வைத்த வெடியில் நாய் பலி

சூளகிரி: சூளகிரி, கோட்டைத்தெருவில் வனப்பகுதியை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, பயங்கர வெடி சத்தம் கேட்டது. மக்கள் வெளியே வந்து பார்த்தபோது, பெண் தெருநாய், தலை சிதறி பலியாகி கிடந்தது. சூளகிரி போலீசார் விசாரணையில், வனப்பகுதியில் பன்றிகளை வேட்டையாட வைத்த வெடியை, நாய் கடித்ததால் அது வெடித்து பலியானது தெரிந்தது.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: இறந்த நாய், 5 நாட்களுக்கு முன் தான், 5 குட்டிகளை ஈன்று பாலுாட்டி வந்தது. வனப்பகுதியில் பன்றிகளை வேட்டையாட மர்ம நபர்கள் வெடி வைப்பதும், அதை கடிக்கும் கால்நடைகள், வாய் சிதறி பலியாவதும் தொடர்கின்றன. சிறுவர், சிறுமியர் விளையாடுவதால், அவர்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. காட்டுப்பன்றிகளை வேட்டையாட வெடி வைக்கும் மர்ம நபர்களை கண்டறிந்து, போலீசார், வனத்துறையினர், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement