குப்பையில் இருந்து மின் உற்பத்தி திட்டம் சேலத்தில் வர விட மாட்டோம்: சவுமியா
சேலம்: சேலம், ஜாகீர் அம்மாபாளையம் அருகே வெள்ளைக்கல்பட்டியில், 90 ஏக்கரில், குப்பை கழிவை எரித்து, 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் அமைய உள்ள இடத்தை, பா.ம.க., –எம்.எல்.ஏ., சவுமியா, இன்று (அக்.,24) ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அவர் கூறியதாவது:
தமிழகத்தில் குப்பை மேலாண்மை செய்வது எப்படி, திடக்கழிவு மூலம் எப்படி அழிக்கலாம் என்ற வழிமுறை தெரியவில்லை. சென்னையில் கொடுங்கையூர், பெருங்குடி போன்ற இடங்களில் குப்பையை கொட்டி வைத்துள்ளனர். அங்கு குப்பை எரி உலை திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
அதேபோல் சேலத்தில் செயல்படுத்த, 90 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான திட்டம், கடந்த ஆட்சியில், ‘வேஸ்ட் டு எனர்ஜி’ என அழைக்கப்பட்ட இத்திட்டத்தை, தற்போது பெயர் மாற்றி, எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் புற்றுநோயை உருவாக்கும். ரசாயனங்களை வெளியேற்றும். அதற்கு மாற்றாக, காற்றாலை, சூரிய ஒளி மின்சாரம் என, சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிகளில் மின் உற்பத்தி செய்யலாம்.
இப்பகுதியில் தரமான கனிம வளங்கள், புதையல் போன்று கொட்டிக்கிடக்கிறது. அதன் மதிப்பு, 3,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். புதையலை துாக்கி எறிந்துவிட்டு குப்பையை கொண்டு வந்து கொட்டுவது ஏற்புடையதல்ல. எரித்த சாம்பல் காற்றில் கலந்து பரவும்போது, குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் உண்டாகும்.
ஜவுளி பூங்கா திட்டத்துக்கு, 800 கோடி, குப்பை எரி உலை திட்டத்துக்கு, 200 கோடி என, 1,000 கோடி ரூபாய் நிதி, சேலம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் திட்டங்கள். அதனால் இத்திட்டத்தை கொண்டு வர விடமாட்டோம். சட்ட ரீதியாக அழுத்தம் கொடுப்போம். திட்டத்தை கைவிடும் வரை தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.