டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி; பள்ளிக்கல்வித்துறை திட்டம்

-நமது சிறப்பு நிருபர்-

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதி தேர்வு என்ற, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அந்த வகையில், தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம், 'டெட்' தேர்வுகளை நடத்துகிறது.

கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பாக, பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும், 'டெட்' தேர்வு தேர்ச்சி கட்டாயம் என, உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு, செப்., 1ல் தீர்ப்பு வழங்கியது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, 2026 ஜனவரி, ஜூலை, டிசம்பர் ஆகிய மாதங்களில், சிறப்பு, 'டெட்' தேர்வுகள் நடத்தப்படும் என, பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. இருப்பினும், ஜனவரி மாதம் சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படவில்லை. ஜூலை மாதம் தேர்வு நடந்தது. இதில், 1.09 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை.

'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத, பணிபுரியும் ஆசிரியர்களின் நலனுக்காக, வரும் டிசம்பர் மாதம், சிறப்பு, 'டெட்' தேர்வு, நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எதிர்கொள்ளும் வகையில், ஆசிரியர்களுக்கு நேரடி பயிற்சிகள் வழங்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

பள்ளி செயல்பாடுகள் பாதிக்காத வகையில், வரும், 31ம் தேதி முதல், டிச., 13ம் தேதி வரை, சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

Advertisement