நில வகைப்பாடு மறு ஆய்வு வழிமுறைகள்
சி.எம்.டி.ஏ., முழுமை திட்டத்தில் சேர்ப்பு
சென்னை: ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நில வகைப்பாடு விபரங்களை, மறு ஆய்வு செய்வதற்கான வழிமுறைகள், மூன்றாவது முழுமை திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாக, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டம், 2008ல் அறிவிக்கப்பட்டது. அப்போது, 1,189 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ள அனைத்து நிலங்களுக்கும், சர்வே எண் வாரியாக நில வகைப்பாடு வரையறுக்கப்பட்டது.
முழுமை திட்டம் அறிவிக்கப்பட்டபோதே, பெரும்பாலான இடங்களில் நில வகைப்பாடு விபரங்களில் தவறுகள் இருப்பதாக புகார் எழுந்தது. சி.எம்.டி.ஏ.,வில், அப்போது இருந்த அதிகாரிகள், நில வகைப்பாடு குறித்து ஆய்வு செய்ய முன்வரவில்லை.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, ஒட்டுமொத்தமாக நில வகைப்பாடு விபரங்களை மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுக்களும் செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள், தவறான நில வகைப்பாடுகளுக்கும் கட்டணம் செலுத்தி, சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை பெருநகரில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நில வகைப்பாடுகளை மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுக்கள் காலாவதியாகி விட்டன.
இதனால், நில வகைப்பாடு தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து உள்ளன.
இந்நிலையில், மூன்றாவது முழுமை திட்டம் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதில், நில வகைப்பாடு விபர குறைபாடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு நிர்ணயிக்கப்படும் நில வகைப்பாடு விபரங்களும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான வழிமுறைகள் மூன்றாவது முழுமை திட்டத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.