நாட்டின் பணக்கார பிராந்திய கட்சியாக உருவெடுத்தது பாரத் ராஷ்ட்ர சமிதி! ஆட்சியில் இல்லாத போதும் குறையாத பண இருப்பு

7

- சிறப்பு நிருபர் -:

நாட்டிலேயே மிக அதிக சொத்து மதிப்பு மற்றும் பண இருப்பு உடைய பிராந்திய கட்சிகளில் ஒன்றாக, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், 72, தலைமையிலான, பி.ஆர்.எஸ்., எனப்படும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி உருவெடுத்துள்ளது.

வருவாய் பற்றாக்குறை



தேர்தல் கமிஷனில் அக்கட்சி சமர்ப்பித்த, 2025 - 26ம் நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கையில், கட்சிக்கு, 1,509 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாகவும், அதில், 1,431 கோடி ரூபாய் வங்கிகளில் வைப்புத் தொகையாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் இருந்து பிரிந்து, 2014ல், தனி மாநிலமாக தெலுங்கானா உருவானது. இதற்கான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியவர்களில், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவும் ஒருவர். அதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக இரு முறை சட்டசபை தேர்தல்களில் வென்று, 10 ஆண்டுகள் தெலுங்கானா முதல்வராக அவர் பதவி வகித்தார். 2023 சட்டசபை தேர்தலில், காங்கிரசிடம் அவர் ஆட்சியை பறிகொடுத்தார்.

ஆட்சி அதிகாரத்தை இழந்த போதும், நாட்டிலேயே மிக அதிக சொத்து மதிப்பு மற்றும் பண இருப்பு உடைய பிராந்திய கட்சிகளில் ஒன்றாக, பாரத் ராஷ்ட்ர சமிதி உருவெடுத்துள்ளது. இது, அக்கட்சி தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்த, 2025 - 26ம் நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

அதன்படி, பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு வங்கிகளில் மொத்தம், 1,431 கோடி ரூபாய் வைப்புத்தொகை உள்ளது. இதற்கு ஆண்டுதோறும், வட்டியாக மட்டும், 97.76 கோடி ரூபாய் கிடைக்கிறது. மேலும் அக்கட்சிக்கு, 66.26 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடங்கள் மற்றும் அசையா சொத்துகளும், 11.17 கோடி ரூபாய் கடன்களும் உள்ளன.

தேசிய கட்சியாக உருவெடுத்த கால கட்டத்தில், மஹாராஷ்டிராவில் வாங்கப்பட்ட புனே மற்றும் நாக்பூர் அலுவலகங்களின் மதிப்பு முறையே, 11.73 கோடி ரூபாய் மற்றும் 6.97 கோடி ரூபாய் என, கணக்கில் காட்டப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில், கட்சியின் மொத்த வருமானம், 114 கோடி ரூபாய்.

இதில், நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நன்கொடைகள் மூலம், 16.44 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. எனினும், தேர்தல் பிரசாரங்கள் மற்றும் செலவுகள், 162 கோடி ரூபாயாக இருந்ததால், இந்த நிதியாண்டில், 48 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முன்னதாக, 2024- - 25ம் நிதியாண்டில் வருமானம் மற்றும் செலவு இரண்டும் தலா, 180 கோடி ரூபாயாக சமநிலையில் இருந்தது.

குற்றச்சாட்டு



தெலுங்கானாவில், பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சியில் இருந்த, 2022 - 23 மற்றும் 2023 - 24 நிதியாண்டுகளில், அக்கட்சியின் வருமானம் பெருமளவில் அதிகரித்தது. அந்த இரு ஆண்டுகளில் மட்டும் மொத்தம், 1,423.18 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 2022 - 23ல், 737.67 கோடி ரூபாய் வருமானம் கிடைத்த நிலையில், செலவு, 52 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது.

இதனால், 680 கோடி ரூபாய்க்கும் அதிகமான உபரி ஏற்பட்டது. 2023 - 24ல், 685 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய கட்சி, 254 கோடி ரூபாய் செலவிட்டது. இதன் மூலம், 431 கோடி ரூபாய் உபரி கிடைத்தது. உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலம் அதிக நிதி பெற்ற கட்சிகளில், தேசிய அளவில் பாரத் ராஷ்ட்ர சமிதி நான்காவது இடத்தை பிடித்திருந்தது.

ஆட்சியில் இருந்தபோது இக்கட்சி, 1,300 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றியது. தெலுங்கானாவில், பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சியில் இருந்த போது பல்வேறு பாசன திட்டங்களில் ஊழல் நடந்ததாக, முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்., அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், அக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சில பாசன திட்டங்கள் தொடர்பாக கமிட்டிகள் அமைக்கப்பட்டு விசாரணையும் நடக்கிறது.

முதல்வராக இருந்த போது, மத்தியில், பா.ஜ.,வுக்கு எதிரான தேசிய அளவிலான கூட்டணிக்கு நிதியுதவி அளிக்க தயாராக இருப்பதாக சந்திரசேகர ராவ் தெரிவித்திருந்தார். தற்போது ஆட்சியில் இல்லாத நிலையில், அவரது கட்சியின் வருமானம் குறைந்திருந்தாலும், அதன் வங்கி வைப்புகள் மற்றும் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகமாக இருப்பது, தணிக்கை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

Advertisement