கான்கிரீட் காடு! திரும்பும் திசை எல்லாம்... கான்கிரீட் காடு!:குறைந்தது சாகுபடி பரப்பு

3

கோவை,:கோவையில் நகரமயமாதல் வேகமாக நடக்கிறது. 4 ஆண்டுகளில் நிகர சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில், வீடுகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

2021-22ல் 4.08 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு, 2025-26ல் 3.83 லட்சம் ஏக்கராக சரிந்துள்ளது. மழையின்மை, நிலத்தடி நீர் குறைவு, பொருளாதார நெருக்கடி, வேகமான நகரமயமாதல் ஆகியவை விவசாய நிலங்கள்

சுருங்குவதற்கு காரணங்கள்.

2011ல் 7.58 லட்சம் வீடுகள் இருந்தன. அது தற்போது 8.59 லட்சமாக அதிகரித்து உள்ளது. 34 லட்சமாக இருந்த மாவட்ட மக்கள் தொகை, தற்போது 40 லட்சத்தை தாண்டி விட்டது.கல்வி, மருத்துவம், தொழில் துறைகளில் கோவை வேகமாக வளர்ந்து வருவதால் பக்கத்து மாவட்டங்களில் இருந்து குடிபெயர்வோர் பெருகி விட்டனர். இதனால் வீடுகளுக்கான தேவை அதிகரித்து நகரம் விரிவடைகிறது.

ஊரக பகுதிகளிலும் குடியிருப்பு மனைகள் பெருகி வருகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன் விவசாயம் நடந்த நிலங்கள், வணிக குடோன்களாகவும் மனைகளாகவும் மாறி வருகின்றன.

விவசாய நிலங்களில் தொடர்ந்து 3 ஆண்டுகள் விவசாயம் நடக்காமல் இருந்தால், நிலத்தின் தன்மை, நீர்வசதி, பாசன தொடர்பு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, நிலத்தை மனைப்பிரிவாக மாற்றுவதற்கான தடையின்மை சான்றிதழை வேளாண் துறை அதிகாரிகள் வழங்கி வந்தனர்.

ஆனால், சமீபத்தில் இந்த நடைமுறையை மாற்றி, நகர் ஊரமைப்பு துறை நேரடியாக அனுமதி வழங்க அரசு வழிவகை செய்துள்ளது.சூலூர், எஸ்.எஸ்.குளம், அன்னூர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு திட்டமிடப்பட்ட பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு குடியிருப்பு, வணிகம், கல்வி, தொழிற்சாலை, விவசாயம் போன்ற பயன்பாடுகளுக்கு ஏற்ப நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இப்

பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களும் நிலப்பிரிவுகளும், அந்தந்த மண்டல விதிமுறைகளுக்கு உட்பட்டே அமைக்கப்பட வேண்டும்.

நகர்ப்புற விரிவாக்கமும், வீடுகள் அதிகரிப்பும் பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாக இருந்தாலும், எதிர்கால உணவு உற்பத்திக்கான விளைநிலங்களை பாதுகாப்பதும் மிக அவசியம்.

விளைநிலங்களின் பரப்பு குறைவது சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும். குடிநீர் தேவையும் அதிகரித்து, நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு செல்லும் அபாயம் உள்ளது.தற்போதைய வளர்ச்சி தேவைகளுடன் எதிர்கால பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, விவசாய நிலங்கள் மனைகளாக மாற்றப்படுவதைக் கட்டுப்படுத்த, நிலையான திட்டமிடல் தேவை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Advertisement