பி.ஏ.பி., கால்வாய் துார்வாரும் பணி உழவர் குழு மூலம் கண்காணிப்பு

பொங்கலுார்: பி.ஏ.பி. இரண்டாவது மற்றும் மூன்றாவது மண்டல பாசனக் கால்வாய்களை துார்வார 14.9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கால்வாய்களில் தேங்கிய படிமங்கள் அகற்றப்பட்டு சில இடங்களில் 2 அடி ஆழத்திற்கு மண் அள்ளப்பட்டு தரைப்பகுதி சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் திறக்கப்படும் நீர் தடையின்றி வேகமாக கடைமடை வரை சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீரணம்பாளையம் நீரினை பயன்படுத்துவோர் நலச்சங்க தலைவர் வேலுசாமி கூறுகையில், ‘‘முறைகேடுகளை தவிர்க்க பணிகள் ஜியோ டேக் மூலம் முறைப்படுத்தப்பட்டு புதிய ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவனங்கள், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு ஒவ்வொரு வாய்க்கால் பாசன சபையிலும் உழவர் குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. காங்கயம், வெள்ளகோவில் பகுதியில் உள்ள, 21 பாசன சபைகளுக்கும் இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் வறட்சி தாக்கம் சற்று சமாளிக்கப்படும்’’ என்றார்.

இந்நிலையில், பொங்கலுார் அருகே நடந்து வரும் வாய்க்கால் தூர் வாரும் பணியை சிறப்பு கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த செயற்பொறியாளர் ரவி, உதவி செயற்பொறியாளர்கள் சண்முக தேவி, செல்வகுமார், சுபாஷினி, உதவி பொறியாளர்கள் கமலேஷ், சந்தியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Advertisement