புதிய பஸ் நிலையத்தில் தேங்கிய மழை நீர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு நாள் பெய்த மழைக்கே புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாட்டத்தில் பல்வேறு பகுதியில் நேற்று (அக்.,24) இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளான தியாகதுருகம், காந்தி ரோட்டில் கழிவு நீர் கால்வாய் வழிந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் குடியிருப்புக்கு மத்தியிலும், வயல்வெளியில் குளம்போல் மழைநீர் தேங்கியது.

கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் ரவுண்டானா அருகே நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16.21 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட புறநகர் பஸ் நிலையதிலும் குளம்போல் மழை நீர் தேங்கி நின்றது.

இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அருகிலும், சென்னை, கிளாம்பாக்கம் செல்லும் பஸ்கள் நிற்கும் இடங்களில் மழை நீர் தேங்கியது.

பஸ் நிலையத்தில் முறையான வடிகால் வசதியின்மையால் நீண்ட நேரம் தண்ணீர் தேங்கி நின்றது. ஒரு நாள் பெய்த மழைக்கே பஸ் நிலையத்தைச் சுற்றிலும் குளம்போல் தேங்கிய தண்ணீரால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

தொடர் மழை பெய்யும் பட்சத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, புதிய பஸ் நிலையத்தில் மழை நீரை முறையாக வெளியேற்றும் வகையில் போதிய வடிகால் வசதியை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement