அரியாங்குப்பம் காய்கறி மார்க்கெட் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் காய்கறி மார்க்கெட்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை கொம்யூன் பஞ்சாயத்தினர் அதிரடியாக அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியாங்குப்பம் காய்கறி மார்க்கெட்டில் சாலை வரை, இரும்பு தகடு போட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது. மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது.

மார்க்கெட் பகுதியில் செல்லும் மழைநீர் வடிகால் வாய்க்காலை சில வியாபாரிகள் ஆக்கிரமித்திருந்தனர். இதனால் வாய்க்காலில் அடைத்துள்ள குப்பைகளை ஊழியர்கள் சுத்தம் செய்ய முடியாமல் இருந்ததால், மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கியது. .

வடக்கு கிழக்கு பருவ மழை துவங்குவதற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரியாங்குப்பம் கொம்யூன் அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் கொடுத்திருந்தனர். ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் இருந்தது.

இந்நிலையில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் வினாயகமூர்த்தி முன்னிலையில், பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக நேற்று அகற்றினர். அப்போது, வியாபாரி ஒருவர் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார். பாதுகாப்பில் இருந்த அரியாங்குப்பம் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அனுப்பினர். இதனால் மார்க்கெட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement