கணவரின் அன்புக்கு காரில் இருக்குது சாட்சி

4

மனைவியிடம் அன்பை காட்ட நினைக்கும் கணவர்களுக்கு ஆயிரம் யோசனைகள் ஓடோடி வரும்; அப்படி வந்த யோசனை ஒன்றை செயல்படுத்தினார் ஒருவர். புதிதாக வாங்கிய காரில், மனைவியின் பாதச்சுவடுகளை பதிப்பது அவரது திட்டம். செஞ்சாந்துக் குழம்பு நிறைந்த தட்டில் மனைவி ஏறி நிற்க, அப்படியே அவரை துாக்கினார் கணவர். மனைவியின் பாதங்களில் இருந்த செஞ்சாந்து அச்சு, காரின் பானெட்டில் பதிந்தது. ஒட்டு மொத்த குடும்பத்தினரும், மகிழ்ச்சியை கொண்டாடினர்.

இந்த நிகழ்வின் வீடியோ, வலைதளங்களில் பரவியது. பலரும் இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கமென்ட்களை பதிவு செய்தனர். 'காரும் ஒரு லட்சுமி தான். அதில் பாதங்களை பதிக்கலாமா' என்பது ஒருவரது கேள்வி. 'காரை நேசிப்பவர் இப்படி செய்யமாட்டார்' என்பது இன்னொருவரின் புகார். ஆனால், 'கணவரின் அன்புக்கு காரில் பதிந்த பாதச்சுவடுகளே சாட்சி' என்றும், 'தம்பதியின் ஒற்றுமையை இந்த செயல் வெளிக்காட்டுகிறது' என்றும், இன்னொரு தரப்பினர் கமென்ட் செய்கின்றனர்.

தாய் சமையலுக்கு இணையில்லை: வீடியோவில் சச்சின் உருக்கம்



கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், நீண்ட பயணங்களில் தாயின் சமையலை அதிகம் தவறவிட்டதாக கூறுகிறார். இதுபற்றிய அவரது இன்ஸ்டாகிராம் வீடியோ, 2 கோடி பார்வைகளை கடந்துள்ளது. வீடு திரும்புவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பே தாயாரை அழைத்து, தனக்குப் பிடித்த உணவுகளை சொல்வாராம். தாயார் செய்யும் உணவின் செய்முறை குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அவர் செய்வதை போன்ற சுவையை மற்றவர்களால் உருவாக்க முடியவில்லை என்கிறார்.

Latest Tamil News
'வீட்டில் இதுபோன்ற உணவுகள் சமைக்கப்படும் வரை வாழ்க்கை என்பது ஒரு அழகான பயணம் தான்' என்கிறார் சச்சின். 'வாழ்க்கை ஒருவரை எவ்வளவு உயரத்துக்கு கொண்டு சென்றாலும், வீட்டில் சமைத்த உணவே, அவர் மிகவும் ஏங்கும் விஷயமாக இருக்கும்' என்பதை சொல்வதாக அவரது வீடியோ அமைந்துள்ளது.

ஐபோனை பறிச்சுட்டாங்க: விமான நிலையத்தில் கதறல்



துபாயில் வாங்கிய ஐபோன் 18 ப்ரோவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்ததை கண்டித்து, கொச்சி நெடும்பசேரி விமான நிலையத்தில், 'எஜூபோர்ட்' நிறுவனர் அஜாஸ் முகமது தர்ணாவில் ஈடுபட்டார். ஏற்கனவே ஒரு போன் வைத்திருந்ததால், புதிய, பாக்ஸ் பிரிக்கப்படாத ஐபோனுக்கு வரி கேட்டதாகவும், மறுத்ததால் போன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

'இது என் தனிப்பட்ட பயன்பாட்டுக்கான போன், ஒரு ரூபாய் கூட வரி செலுத்த மாட்டேன்' என்பது அஜாஸ் முகமதுவின் வாதம். போராட்டம் மணிக்கணக்கில் தொடர்ந்த நிலையில், சி.ஐ.எஸ்.எப்., படையினர் அவரை வெளியேற்றினர். சுங்க அதிகாரிகளின் பணியில் குறுக்கிட்டதாகவும் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. பழைய பயன்படுத்திய பொருட்களுக்கே வரி விலக்கு உண்டு என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 2026 பேக்கேஜ் விதிகளின்படி, 75 ஆயிரம் ரூபாய் வரையிலான பொருட்களை மட்டுமே வரியின்றி கொண்டு வரலாம்.

'டைம்ஸ்' சதுக்கத்தில் தீபாவளி



Latest Tamil News
நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் தீபாவளி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. இந்திய அமெரிக்க சமூகத்தினரும், அமெரிக்க நண்பர்களும் ஒன்று கூடி அமைதி, நம்பிக்கை, நல்லிணக்கத்தை வலியுறுத்தி கொண்டாடினர். துாதரக அதிகாரி பினய் ஸ்ரீகாந்த பிரதான் தலைமையில் நடந்த விழா தொடர்பான படங்களை, இந்திய துணைத் துாதரகம் வெளியிட்டுள்ளது. தீபாவளியின் உணர்வை கொண்டாடியதுடன், நியூயார்க்கின் மையப்பகுதியில் மக்களை ஒன்றிணைப்பதாகவும் இந்நிகழ்வு அமைந்தது.

இணையத்தில் வென்ற கவிதா; உயரம் தாண்டுதலில் தோற்றார்



ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்தை சேர்ந்த கணவரை இழந்த கவிதா, இரு குழந்தைகளையும், மாமனார், மாமியாரையும் காப்பாற்றுவதற்காக, ஊர்க்காவல் படையில் சேர முடிவு செய்தார். அதற்கான உடல் தகுதித்தேர்வில் சேலை அணிந்து வெறுங்காலுடன் அவர் ஓடிய ஓட்டம், வலைதளங்களில் வைரலானது. குறித்த நேரத்துக்கு முன்னரே, 1,600 மீட்டர் ஓட்டத்தை ஓடி முடித்த அவர், எப்படியும் வேலையில் சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

Latest Tamil News
இந்நிலையில், ஊர்க்காவல் படை தேர்வின் அடுத்த கட்டமாக உயரம் தாண்டுதல் இருந்தது. மூன்று வாய்ப்பு கிடைத்தும் அவரால் தேவையான உயரத்தை தாண்ட முடியவில்லை. அவர் தகுதி பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டார். 'துரத்தும் துயரத்தை வென்று சாதனை படைக்கட்டும்' என்று அவருக்கு வலைதள பிரியர்கள் ஆறுதல் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement