ஹார்முஸ் ஜலசந்தியில் வெடித்து சிதறிய 4 எண்ணெய் கப்பல்கள்; மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்

9

ரியாத்: ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கொடூரத் தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருகிறது. அடுத்த மாதம் அமெரிக்காவில் நடக்கும் இடைத்தேர்தலுக்குப் பிறகு, இந்த தாக்குதலை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், கடந்த 24 மணிநேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்று கொண்டிருந்த 4 எண்ணெய் சரக்கு கப்பல்கள், ஈரான் கடலில் பதித்து வைத்துள்ள கண்ணி வெடியில் சிக்கியுள்ளன. இதில், 3 கப்பல்கள் வெடித்து சிதறியதில், பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை கூறியதாவது; ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதிக்கப்படாத பாதை வழியாகச் செல்ல முயன்ற 3 எண்ணெய் சரக்கு கப்பல்கள், கடலில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளில் மோதி வெடித்துத் தீப்பிடித்துள்ளன.

கிழக்குப் பகுதியில் சென்ற ஒரு எண்ணெய் சரக்கு கப்பல் கண்ணிவெடியில் மோதி சேதமடைந்து நகர முடியாமல் நின்றுள்ளது. ரேடார் அமைப்புகளை அணைத்துவிட்டு, எச்சரிக்கைகளையும் மீறிச் சென்றதால் கப்பல்களுக்கு இந்த கதி ஏற்பட்டுள்ளது, இவ்வாறு கூறியுள்ளது.

முக்கிய கடல்வழிப் பாதைகளில் இருந்த தடைகளை நீக்கிவிட்டதாகத் அமெரிக்க ராணுவம் கூறிய மறுநாளே, இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதுஒருபுறம் இருக்க, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் நகரை நோக்கி வீசிய 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சவுதி வான்வழி பாதுகாப்புப் படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகச் சவுதி அறிவித்துள்ளது. ரியாத், கர்ஜ் மற்றும் நஜ்ரான் பகுதி மக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுப் பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

Advertisement