சொந்த புத்தியும், சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி தவெக அரசு; ஸ்டாலின் விமர்சனம்

14

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாகக் கூறி, திமுக மகளிரணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தவெக அரசை விமர்சித்து திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது; எல்லோரும் நல்லா இருக்கீங்களா? என்று கேட்டால், தமிழகம் இப்போது இருக்கும் நிலையை பார்த்து, கிண்டல் பண்றீங்களா? என்று என்னை கேட்பீர்கள். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின்மை, விலைவாசி உயர்வை கண்டித்து நாளை (அக்.,31) தமிழகம் முழுதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

சினிமாவில் ஹீரோவில் இருந்தவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என்று சில லட்சம் பேர் செய்த தவறு, ஒட்டுமொத்த மக்களையும் பாதித்துள்ளது. தவெக ஆட்சி அமைவதற்கு முன்பு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி தான் விஜய் ஆட்சிக்கு வந்தார்.

இப்படி கத்தி கத்தி பஞ்ச் டயலாக் பேசுபவரின் ஆட்சியில் இன்னைக்கு என்ன நிலைமை? பட்டப்பகலில் கொடூர கொலை, பாலியல் வன்கொடுமை என அனைத்தும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. குற்றவாளிகளுக்கு இந்த அரசின் மீது கொஞ்சம் கூட பயமில்லை. அவர்களுக்கான ஆட்சியாக பார்க்கிறார்கள்.

சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடுகின்றனர். இதை எல்லாம் முதல்வர் பார்க்கிறாரா? செய்திகள் காதுக்கு செல்கிறதா? என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. போராட்டம் நடத்தியும் எந்த பதிலும் இல்லை. சினிமா சூட்டிங்கில் கேரவனில் போய் மணிக்கணக்கில் உட்கார்ந்து கொள்வதைப் போல, யாராலையும் அணுக முடியவில்லை. இது எல்லாத்துக்கும் முதல்வர் தானே பொறுப்பு? ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டாமா?

ஆட்சிக்கு வந்து 6 மாதமாகியும், எல்லாத்துக்கும் திமுகவை மட்டுமே குறைசொல்கின்றனர். இதில், பாதி குற்றங்களில் தவெகவினர் தான் சம்பந்தப்பட்டனர். தன்னுடைய கட்சியினரை கட்டுப்படுத்தினாலோ குற்றம் பெருமளவில் குறையும். பெண்களை தவெக காப்பாற்ற வேண்டாம். தவெகவினரிடம் இருந்து தான் பெண்களை காப்பாற்ற வேண்டும்.

தவெக நிர்வாகி மெத் பூபாலன் குறித்து செய்தி வெளியிட்டால், பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுதான் தூயசக்தியா?

இந்தியாவிலேயே பணவீக்கம் குறைவான மாநிலமாக தமிழகத்தை வைத்திருந்தோம். ஆனால், இப்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்கு எந்தத் துறையிலும் நிர்வாகத்திறன் கிடையாது. மூடர் கூட்டத்தின் ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சொந்த புத்தியும் இல்லாத, சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement