பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'
ஓமலுார்; பத்திர பதிவுத்துறையில், 'ஸ்டார் 3.0' திட்டத்தை
ரத்து செய்யக்கோரி,
தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர், நேற்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சொத்து பத்திரம் பதிவு செய்யும் முறையை, முற்றிலும் நவீனமயமாக்கும் வகையில், பதிவுத்துறை சார்பில், செயல்படுத்தப்பட்டு வரும், 'ஸ்டார் 3.0' திட்டமான காகிதமில்லா மற்றும் நேரில் வரத்தேவையற்ற, பதிவு நடைமுறைகளை திரும்ப பெற கோரியும், மாதிரி பதிவு மையங்கள் அமைக்க இ-டெண்டர் முறையை கைவிடக்கோரியும், நேற்று தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் மாநில சங்கத்தினர் ஒரு நாள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டத்தில் ஓமலுார், காடையாம்பட்டி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம் ஆகிய பகுதியில் உரிமம் பெற்ற, 30க்கும் மேற்பட்ட நபர்களும், உரிமம் பெறாத பலரும் பணியை புறக்கணித்தனர்.
இதில் ஜலகண்டாபுரத்தில் பத்திர எழுத்தர்கள், ஆலோசகர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் ஆகியோர், ஜலகண்டாபுரம் பத்திர பதிவுத்துறை முன் கவன ஈர்ப்பு கூட்டம் நடத்தினர். போராட்டம் காரணமாக ஓமலுார், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஜலகண்டாபுரம் ஆகிய பத்திரப்பதிவு அலுவலகங்களில், கூட்டம் குறைவாக காணப்பட்டது. இருப்பினும் ஆன்லைன் மூலம் மற்றும் நேரிலும் கொண்டு வரப்பட்ட சில பத்திரங்கள் பதிவு செய்யும் பணி மட்டும் நடந்தது. ஓமலுாரில், 15க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்
பட்டது.
* தாரமங்கலம் பத்திரம் மற்றும் நகல் எழுத்தர் சங்கம் சார்பில், ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நேற்று நடந்தது. இதில் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணித்து, தாரமங்கலம் சார்பதிவாளர் ஜெயகீதாவிடம் மனு அளித்தனர். அதில், 'எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், பழைய பத்திரப்பதிவு முறையை நடைமுறைபடுத்த வேண்டும்' என கூறியுள்ளனர்.
* ஆத்துார் சார்பதிவாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு பத்திர நகல் எழுதுபவர் சங்க தலைவர் லியாகத் அலி தலைமையில், கறுப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல், தலைவாசல், கெங்கவல்லி சார்பதிவாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.