இளைஞர் மீது காரால் மோதி தள்ளி அரிவாளால் வெட்டிய மாஜி காதலி உட்பட மூவர் கைது

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மோட்டார் பைக்கில் சென்ற இளைஞரை காரால் மோதி கீழே தள்ளி அரிவாளால் வெட்டிய முன்னாள் காதலி, அவரது கணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தெற்கு புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் 27. கொத்தனார். நேற்று (அக்.,26) இரவு இவர் புத்தளம் அருகே திருநகரில் மோட்டார் பைக்கில் சென்றார். அவ்வழியாக வந்த ஒரு கார் மோட்டார் பைக் மீது மோதியது. இதில் விவேக் கீழே விழுந்தார். காரில் இருந்து இறங்கிய கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவருக்கு தலை, கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. பின் அக்கும்பல் காரில் தப்பியது. படுகாயம் அடைந்த விவேக் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விவேக்கின் தாய் கிருஷ்ண குமாரி சுசீந்திரம் போலீசில் அளித்த புகாரில் கூறியதாவது: மகன் விவேக்கும், தங்க மலர் 26, என்ற பெண்ணும் ஏழு ஆண்டுகளாக காதலித்தனர். ஆறு மாதங்களாக தங்கமலர் மகனிடம் சரியாக பேசவில்லை. இதற்கிடையில் தங்கமலருக்கும் பழவினை பூவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கப்பல் ஊழியர் திவேக் 28, என்பவருக்கும் செப்., 23- திருமணம் நடந்தது. இதை அறிந்த மகன் தங்கமலரிடம் கேட்டிருக்கிறார். இந்த விரோதத்தில் திவேக், தங்கமலர், தெற்கு சூரன்குடியைச் சேர்ந்த சுயம்புலிங்கம் 32, பறக்கையைச் சேர்ந்த தங்கச்செல்வன் 24, ஆகியோர் காரில் வந்து மோட்டார் பைக் மீது மோதி மகனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதன்பேரில் தங்கமலர் உட்பட 4 பேர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திவேக், தங்க மலர், தங்கசெல்வன் கைது செய்யப்பட்டனர்.

Advertisement