காய்ந்த மரங்களை அகற்றலாமே பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு ஆபத்து

பரமக்குடி: பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு இரண்டு பட்டுப்போன காய்ந்த மரங்கள் அகற்றப்படாமல் உள்ளதால் ஆபத்து காத்திருக்கிறது.

பரமக்குடி அரசு மருத்துவமனை பழைய கட்டடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டு தற்போது புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன் பகுதியில் இரண்டு காய்ந்த மரங்கள் மாதக்கணக்கில் உள்ளது. தொடர்ந்து புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வந்த பிறகும் இவற்றை அகற்றாமல் இருக்கின்றனர். இங்கு தினமும் 1000 பேருக்கும் மேற்பட்ட புற மற்றும் உள் நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

மேலும் புதிய கட்டடம் கண்ணாடி உள்ளிட்டவைகளால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புயல், மழை நேரங்களில் மரம் சாயும் சூழலில் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவதுடன் கட்டடம் சேதமடையும் நிலை அதிகம் உள்ளது. மேலும் நெடுஞ்சாலையை ஒட்டி மரங்கள் சாய்ந்தால் ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

எனவே உடனடியாக அனைத்துத் துறை அதிகாரிகள் கவனித்து மரங்களின் நிலைமை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement