சிறைகளில் என்னென்ன பாதுகாப்பு: சிறு அலட்சியமும் தீவிரமாக கருதப்படும் என டி.ஜி.பி., எச்சரிக்கை

மதுரை: தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவம் போன்று பிற சிறைகளில் நடக்காமல் இருக்க என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோர் அறிவுறுத்தி உள்ளார்.

மருத்துவ அவசரநிலை ஏற்பட்டாலும், ஒரு காவலர் மட்டும் சென்று கைதிகளின் அறை கதவைத் திறக்கக்கூடாது. அதிகாரி முன்னிலையில், போதிய ஆயுதங்களுடன் மட்டுமே திறக்க வேண்டும். முடிந்தளவு மருத்துவ அலுவலரை சிறைக்கு வரவழைக்க வேண்டும். மருத்துவ சிகிச்சை பெறும் கைதிகளை மற்ற கைதிகளுடன் ஒரே பிரிவில் தங்கவைக்கக் கூடாது.

அதிக ஆபத்துள்ளவர்கள், வன்முறையில் ஈடுபடக்கூடியவர்கள், தப்பிச் செல்ல முயற்சிப்பவர்கள் தனி அறைகளில் தங்கவைக்கப்பட வேண்டும். அந்த கைதிகளை திறந்தவெளியிலோ, கூட்டாக தங்கும் அறைகளிலோ தங்கவைக்கக் கூடாது.

இரவுப் பணியில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட குறைவாக காவலர்களை நியமிக்கக் கூடாது. எந்தப் பணியிடமும் காலியாக இருக்கக் கூடாது. ஜெயிலர், துணை ஜெயிலர் அல்லது பணியிலுள்ள அதிகாரி இரவில் ரோந்து வர வேண்டும். கண்காணிப்பாளர் இரவில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும். பிரதான கேட் உட்பட அனைத்து பிரிவுகளின் சாவிகளும் பணியிலுள்ள அதிகாரியிடம் மட்டுமே இருக்க வேண்டும். ‘சென்ட்ரி’யிடம் சாவிகளை ஒப்படைக்கக் கூடாது. பிரதான வாசலில் இரு காவலர்கள் துப்பாக்கியுடன் பணியில் இருக்க வேண்டும்.

கண்காணிப்பு கோபுரங்களில் காவலர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். இதை கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும். சிறு அலட்சியமும் தீவிரமாகக் கருதப்படும். சமையலறைகள், பணிமனைகள், பராமரிப்புப் பிரிவுகளில் பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகள், சமையல் உபகரணங்கள், கருவிகள் பொறுப்பான பணியாளர் ஒருவரின் கண்காணிப்பில் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement