தாமதமாக துவங்கிய மழை நெல் நாற்றுக்கு தட்டுப்பாடு

எஸ்.புதுார்: சிங்கம்புணரி தாலுகாவில் வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கிய நிலையில் நெல் சாகுபடிக்கு நாற்று கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

இத்தாலுகாவில் 2000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்வது வழக்கம். இந்தாண்டு சூப்பர் எல் நினோ காரணமாக கடும் வெப்பம் வாட்டி எடுத்த நிலையில் போதிய மழை பெய்யாது என்ற கணிப்பில் விவசாயிகள் நெல் விதைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் இத்தாலுகாவில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கத் துவங்கியுள்ளது. அடுத்ததாக தொடர்ச்சியாக மழை இருக்கும் என்று நம்பப்படுவதால் விவசாயிகள் அவசரமாக விவசாயிப் பணிகளை துவக்கி உள்ளனர். இந்நேரம் நெல் விதைத்து, நாற்றுகள் நடவுக்கு தயாராக இருந்திருக்க வேண்டும். ஆனால் பலரும் விதை பாவாததால் தற்போது நாற்றுக்கள் கிடைக்கவில்லை. பெரும்பாலும் விவசாயிகள் தற்போது தான் விதைத்து வருகின்றனர். வேறு பகுதிகளில் இருந்து நெல் நாற்றுகள் கிடைத்தால் நடவு செய்ய விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். எனவே வேளாண் துறையினர் தேவையான விவசாயிகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து நெல் நாற்றுகளை வாங்கி கொடுக்க முன்வர வேண்டும்.

Advertisement