துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த பெண் சடலம் மீட்பு

அரியலுார்: அரியலுார் அருகே, இளம்பெண் மர்மமான முறையில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

அரியலுார் மாவட்டம், நானாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை, 45, இவரது மனைவி ராஜேஸ்வரி, 35; இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. பிச்சைப்பிள்ளை தன் மனைவி ராஜேஸ்வரி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம். கடந்த 24ம் தேதி தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜேஸ்வரி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் அவரது கணவர் பிச்சைப்பிள்ளை, துாத்துார் போலீசில், மனைவியை காணவில்லை என கொடுத்த புகாரின்படி, ராஜேஸ்வரியை தேடி வந்தனர்.

இந்நிலையில், கீழப்பழுவூர் தோட்டக்கலைத்துறை பின்புறம் வாரியிலுள்ள ஒரு வேப்பமரத்தில், ராஜேஸ்வரி மர்மமான முறையில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்ட, அரியலுார் போலீசார் ராஜேஸ்வரியின் மர்ம சாவு குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement