பலாத்காரம் செய்து பெண் கொலை ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆயுள்

அவிநாசி: அவிநாசியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்து, கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில், ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, மங்கலம் சாலையில், சேலம்–கொச்சி ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை அருகே, கடந்த 2023 செப்டம்பரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, திண்டுக்கல் மாவட்டம் புஷ்பபுதுாரைச் சேர்ந்த ஹில்டன் என்ற விக்கி, 24 என்பவரைக் கைது செய்தனர்.

அவிநாசியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றிய ஹில்டன், மது போதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், சம்பவத்தன்று கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த அவர், கடை முன் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு, பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.

அப்போது சாலையோரத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான அவர், சிகிச்சையில் இருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை, திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹில்டனுக்கு ஆயுள் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்தார்.

Advertisement