போதை மாத்திரை கடத்தல் 2 பேர் கைது

மயிலம்: வாகன தணிக்கையின் போது போதை மாத்திரைகளை பைக்கில் எடுத்து சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் வசிக்கும் மாபாட்ஷாவின் மகன் பாசில் 20; செஞ்சி அடுத்த பெரிய அகரம் பகுதியில் வசிக்கும் செந்தில் மகன் வள்ளல் சூர்யா 26; இந்த இருவரும் மயிலம் தபால் நிலைய அலுவலவகத்தில்,

வெளிமாநிலத்தில் இருந்து அஞ்சல் மூலம் வந்த பார்சலை பெற்றுக் கொண்டு செஞ்சிக்கு திரும்பினர்.

அப்போது மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பு அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அந்த வழியாக மயிலம் மார்க்கத்திலிருந்து செஞ்சி நோக்கி சென்ற பைக்கை மடக்கி விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

தொடர்ந்து பைக்கை ஆய்வு செய்தபோது, அதில் பார்சல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை பிரித்து பார்த்த போது அதில், 100 போதை மாத்திரைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்த போலீசார், பைக் மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement