தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
பெரம்பலுார்: பெரம்பலுார், தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியின் 26வது பட்டமளிப்பு விழா நடந்தது.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கி, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி பேசுகையில், இன்றைய பெண்கள் கல்வி, ஆராய்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம், தொழில்முனைவு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.
மாணவிகள் தங்களுக்குள் இருக்கும் ஆற்றலை உணர்ந்து, உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட வேண்டும். வேலைவாய்ப்பைப் பெறுவதுடன் நின்றுவிடாமல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் முன்னிலை வகித்தார்.
கலெக்டர் அப்துல் ராசிக் பேசுகையில், ‘இந்த கல்வி நிறுவனம், தேசியத் தர மதிப்பீட்டு நிறுவனமான என்.ஏ.ஏ.சி.,யின் ஏ++ தர அங்கீகாரத்தையும், 3.65 சி.ஜி.பி.ஏ., மதிப்பெண்ணையும், 2026ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டப்பிரிவு 3ன் கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுள்ளது. நல்ல மதிப்பெண்கள் பெற்று பட்டம் வாங்குவதை விட, சிறந்த ஒழுக்கம் மற்றும் நேர்மையுடன் சமூகத்திற்குப் பயன்படும் ஒரு நல்ல மனிதராக நீங்கள் உருவெடுக்க வேண்டும்’ என்றார்.
முன்னதாக, கல்லுாரி முதல்வர் கார்த்திகா வரவேற்றார். இதில் 743 இளங்கலை மாணவிகளும், 542 முதுகலை மாணவிகளும் என மொத்தம் 1,285 மாணவிகள் பட்டம் பெற்றனர். ஏப்ரல் 2025ம் ஆண்டு தேர்வுகளில் மாணவிகள் 23 பல்கலைக்கழகத் தரவரிசைகளைப் பெற்று கல்லுாரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
ஏ.என்.ஆர்.எப்., திட்டங்களின் கீழ் ரூ.36.5 கோடி மதிப்பிலான மூன்று ஆராய்ச்சித் திட்ட முன்மொழிவுகளும், ஐ.சி.எம்.ஆர்.டி.எச்.ஆர் மற்றும் ஜி.சி.ஐ.பி.ஐ.ஆர்.ஏ.சி., திட்டங்களின் கீழ் ரூ.87.46 லட்சம் மதிப்பிலான இரண்டு முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத் துறையில் டி.எஸ் ஒலிம்பிய போட்டியில் மகளிர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் முதல்வர் கோப்பை போட்டியிலும் பங்கேற்று ரூ.2,75,000 பரிசுத்தொகையை வென்றுள்ளனர்.
விழாவில், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இளங்கோவன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
ரூ.200 மளிகை விற்பனை துவக்கம்
-
மளிகை தொகுப்பு திட்டம் துவக்கி வைத்தார் அமைச்சர்
-
சில வரி செய்திகள்: திருப்பூர்
-
நான் சொல்வது எல்லாம் உண்மை ஆகிறது; தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ராகுல்
-
குழந்தைகள் கடத்தலை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உதவி செய்யுமா? இஸ்ரோ தலைவர் நாராயணன் கொடுத்த பதில்
-
திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 01/11/2026