ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா செயற்கைக்கோள் இந்தாண்டுக்குள் ஏவப்படும்; இஸ்ரோ தலைவர்



திருப்பதி: இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பதற்கான செயற்கைக்கோளை இஸ்ரோ, நாளை இரவு விண்ணில் ஏவ இருக்கிறது. இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக செயல்பட வேண்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அதன் மாதிரியை வைத்து இஸ்ரோ குழுவினர் சுவாமி தரிசனம் செய்தனர் .

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது; அக்.,30ம் தேதி இரவு 11 மணி 51 நிமிடத்தில் ஜிஎஸ்எல்வி 18 ராக்கெட்டில் என்விஎஸ் 03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவ இருக்கிறோம். இந்தாண்டில் மட்டும் விண்ணில் ஏவப்படும் 5வது செயற்கைக்கோளாகும். ஒரு தனியார் செயற்கைக்கோளையும் ஏவியுள்ளோம்.

ஏற்கனவே 3 நேவிகேஷன் செயற்கைக்கோள்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. நேவிகேஷன் தொழில்நுட்பத்திற்காக மட்டும் ஏவப்படும் 4வது செயற்கைக்கோளாகும். இதன்மூலம், பிஎன்டி எனப்படும் நிலைப்படுத்துதல், வழிகாட்டுதல், கால அளவீட்டுச் சேவைகளுடன் பல பயன்பாடுகள் உள்ளன.

கனவு திட்டமான ககன்யான் திட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. 8 ஆயிரம் பரிசோதனைகள் வெற்றிகரமாக முடித்துள்ளோம். சாதாரண ராக்கெட்டில் வெறும் செயற்கைக்கோள் தான் அனுப்புகிறோம். இதில், மனிதர்களை அனுப்புகிறோம். விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம். இதற்காக, 3 ஆளில்லா ராக்கெட்டுகள் அனுப்பி சோதனை செய்யப்படும். அதன் வெற்றிக்குப் பிறகு மனிதர்களை அனுப்ப முடிவு செய்துள்ளோம். இந்த முதல் ஆளில்லா ராக்கெட் இந்தாண்டுக்குள் அனுப்பப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement