ஆய்வு கூட்டங்களுக்கு வரும் பெண் எம்.எல்.ஏ.,வின் கைக்குழந்தையை கவனிப்பதா அரசு ஊழியர் வேலை?

19

சென்னை :
சென்னை திரு.வி.க., நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக, த.வெ.க.,வை சேர்ந்த பல்லவி உள்ளார். இவருக்கு, சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின், அவர் கலந்து கொள்ளும் அரசு மற்றும் நிகழ்ச்சிகளுக்கு, தன் கைக்குழந்தையுடன் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதை பலரும் கண்டித்தும், அவர் கண்டுகொள்ளவில்லை.

காங்கிரஸ் எம்.பி, கார்த்தி சிதம்பரம், 'பணிபுரியும் பெற்றோருக்கு தேவையான குழந்தை பராமரிப்பு மையம், மகப்பேறு விடுப்பு போன்றவற்றை முழுமையாக ஆதரிக்கிறேன். அதேநேரம் நடைமுறை தேவையை தாண்டி, பொது நிகழ்ச்சிகளுக்கு எம்.எல்.ஏ., பல்லவி தன் கைக்குழந்தையை அழைத்து வருவது, அரசியல் விளம்பரம் மற்றும் கவனத்தை ஈர்க்கும் செயல். த.வெ.க., தலைவர் விஜய், தன் கட்சி எம்எல்.ஏ.,வுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும்' என, வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில், முதல்வர் விஜய் பிரசாரத்துக்கு சென்றபோது, அவர் வேன் அருகே, கைக்குழந்தையுடன் பல்லவி வந்ததை பார்த்ததும், அவரை விஜய் கண்டித்தார். சமூக வலைதளங்களிலும் பலர் கண்டனத்தை பதிவு செய்தனர்.

ஆனாலும், தன் வழக்கத்தை மாற்றிக் கொள்ள மறுக்கிறார் பல்லவி. அதற்கு காரணமாக, 'பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை, வீட்டில் தனியாக விட்டுவிட்டு வர முடியாது. மற்றவர்களின் வலியை புரிந்துகொள்ளா விட்டாலும் பரவாயில்லை. இதை பற்றி தவறாகப் பேச வேண்டாம்' என கூறுகிறார்.

இந்நிலையில், அரசு ஆய்வுக்கூட்டம் போன்றவற்றுக்கு செல்லும்போது, தன் கைக்குழந்தையை துாக்கி செல்கிறார். அந்த குழந்தையை கவனிக்கும் பொறுப்பை, அங்கிருக்கும் பெண் அரசு ஊழியர்களிடம் ஒப்படைக்கிறார். இதனால், அவர் கண் எதிரில் படவே பெண் ஊழியர்கள் அஞ்சும் நிலை உள்ளது.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், நேற்று சென்னை வளர்ச்சி குழு கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., பல்லவி பங்கேற்றார். அப்போது, அவரது குழந்தையை, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும், இரண்டு துணை தாசில்தார்களும், ஒரு பெண் அலுவலரும் கவனித்துக் கொண்டனர். இது, அரசு அலுவலர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 'குழந்தையை வீட்டில் விட்டு வர முடியாது என்றால், குழந்தையை பராமரிக்க, ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்ளலாம். அதை விடுத்து, அரசு ஊழியர்களை குழந்தையை கவனிக்கும்படி கூறுவது சரியான செயல் அல்ல. முதல்வர்தான் அவருக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement