ஐரோப்பாவிற்கு நேரடி புதிய விமான சேவை முன்னணி நிறுவனங்களுடன் அதிகாரிகள் பேச்சு

சென்னை: சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடுகளின் லண்டன், பாரிஸ், பிராங்பர்ட் உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு நேரடி விமான சேவைகளை தொடங்குவது குறித்து, விமான நிறுவனங்களுடன் பேச்சு நடப்பதாக விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பிய கண்டத்திற்கு நேரடியாக, ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனம் மட்டுமே, லண்டன் ஹீத்ரோ நகருக்கு தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது.

பிற ஐரோப்பிய நகரங்களுக்குச் செல்ல விரும்புவோர், துபாய், தோஹா, அபுதாபி உள்ளிட்ட அரபு நாடுகள் அல்லது அண்டை நாடான இலங்கை வழியாகவே, மாறி செல்ல வேண்டிய கட்டாய சூழல் உள்ளது. இதனால் பயண நேரம் அதிகரிப்பதோடு, கூடுதல் கட்டணத்தையும் தமிழக பயணியர் செலவிட வேண்டியுள்ளது.

இதற்கிடையே பிரான்ஸ் தலைநகர் பாரிஸ், ஜெர்மனியின் பிராங்பர்ட் மற்றும் லண்டனுக்கு, நேரடி மற்றும் கூடுதல் சேவைகளை இயக்க, ‘ஏர் இந்தியா, லுப்தான்சா மற்றும் ஏர் பிரான்ஸ்’ ஆகிய முன்னணி நிறுவனங்களுடன் பேச்சு நடந்து வருகிறது.

இது குறித்து, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:

சர்வதேச அளவில் விமானங்களுக்கான தட்டுப்பாடு காரணமாக, புதிய வழித்தடங்களை உடனடியாக தொடங்க இயலவில்லை. தற்போது, சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், பெரிய ரக விமானங்கள் வந்து செல்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள், முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், தென்னிந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்குச் செல்லும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் சுற்றுலாப் பயணியரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த சந்தை தேவையை உணர்ந்து, முன்னணி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். நேரடி சேவைகள் தொடங்கும்போது, பயண நேரம் குறையும் என்பதால், விரைவில் இதற்கான சாதகமான அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement