பண்ருட்டியில் பச்சிளம் ஆண் குழந்தையை விற்ற தாய் உட்பட 4 பேர் மீது வழக்கு: ஒருவர் கைது

பண்ருட்டி: பண்ருட்டியில் பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை ரூ.4.5 லட்சத்திற்கு விற்க தாய் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, புரோக்கரை கைது செய்தனர்.

திருநெல்வேலியை சேர்ந்தவர் பாத்திமா (எ) மஞ்சு,26; திருமணமான இவர், கணவரை பிரிந்து 4 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இன்ஸ்டா மூலம், பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்த அப்துல்லா,31; என்பவருடன் பழக்கம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒன்றரை ஆண்டிற்கு முன் மதம் மாறிய மஞ்சி, தனது பெயரை பாத்திமான என மாற்றிக் கொண்டு, பண்ருட்டியில் அப்துல்லாவுடன் குடும்பம் நடத்தி வருகிறார். கர்ப்பமடைந்த பாத்திமா, சில மாதங்களுக்கு முன் தான் வேலை பார்த்து வந்த பண்ருட்டி செருப்பு கடையில் சோகமாக இருந்தார்.

அப்போது, கடைக்கு வாட்டர் கேன் போட வந்த பண்ருட்டி அன்வர்ஷா நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜாபர்கான்,44; பாத்திமாவிடம் விசாரித்தார். அப்போது, பாத்திமான தனது குடும்ப சூழலை கூறி, ஏற்கனவே ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் தற்போது குழந்தை பிறந்தால் எப்படி காப்பாற்றுவது என புரயவில்லை என புலம்பினார். அதற்கு, ஜாபர்கான், குழந்தை பிறந்ததும், குழந்தை இல்லாதவர்களுக்கு விற்றுவிடாலம் என கூறினார்.

இந்நிலையில் கடந்த 19 ம் தேதி பாத்திமாவிற்கு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அதனை அறிந்த ஜாபர்கான், பாத்திமாவிற்கு பிறந்த குழந்தையை, தனது உறவினர் முபாரக்கான் மூலம், திருச்சி சமயபுரத்தை சேர்ந்த கடந்த 11 ஆண்டாக குழந்தை இல்லாத அரண்–ரேணுகாதேவி தம்பதிக்கு ரூ.4.5 லட்சத்திற்கு விற்க ஏற்பாடு செய்தார். அதன்படி கடந்த 22ம் தேதி பாத்திமா, மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆனதும், ரேணுகாதேவியிலம் ரூ.4.5 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு குழந்தையை ரேணுகாதேவியிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில் பாத்திமா, நேற்ற முன்தினம் ரேணுகாதேவியை தொடர்பு கொண்டு குழந்தையை திருப்பி தருமாறு கேட்டார். ரேணுகாதேவி பதில் கூறாததால், அன்று இரவே பாத்திமா பண்ருட்டி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் திருச்சி சென்று, ரேணுகாதேவியிடம் இருந்து ஆண் குழந்தையை மீட்டு வந்து, கடலுார் குழந்தைகள் நல காப்பக திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ராவதி, முன்னிலையில், பாத்திமாவிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து குழந்தை நல காப்பக திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ராவதி அளித்த புகாரின் பேரில், குழந்தையின் தாய் பாத்திமா, புரோக்கராக செயல்பட்ட ஆட்டோ டிரைவர் ஜாபர்கான்,44; அவரது உறவினர் முபாரக்கான், திருச்சியை சேர்ந்த ரேணுகாதேவி ஆகியோர் மீது வழக்கு பதிந்து, ஜாபர்கானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement