'மார்பக புற்றுநோய் குறித்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்'

கிருஷ்ணகிரி: ''பெண்களுக்கு மார்பக புற்று நோய் குறித்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்,'' என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பிங்க்டோபர் - மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: பெண்களிடையே புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தின் ஒரு பகுதியாக, மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. மார்பகத்தில் கட்டி அல்லது வீக்கம் ஏற்படுதல், மார்பகத்தின் அளவு அல்லது வடிவத்தில் மாற்றம், தோலில் பள்ளம் போன்ற மாற்றங்கள், காம்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அசாதாரண திரவ வெளியேற்றம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதமின்றி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மார்பக சுய விழிப்புணர்வு, தகுதியான பெண்களுக்கு மருத்துவ வழிகாட்டுதலின்படி மார்பகப் பரிசோதனை மேற்கொள்ளுதல் மற்றும் சந்தேகத்திற்குரிய அறிகுறிகள் இருப்பின் உரிய உயர் மருத்துவ நிலையங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தி, ஆரம்பகால கண்டறிதல் மற் றும் உரிய சிகிச்சையை ஊக்கவிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
மாவட்ட சுகாதார அலுவலர் ஜெகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் இனியள் மண்டோதரி, டாக்டர்கள் சுரேஷ், முகமது அயூப், மோனிஷா, நஸ்ரின், ஜோதிபாசு கலந்துக்கொண்டனர்.

Advertisement