சின்ன வெங்காயம் கிலோ ரூ.120

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை அதிகரித்து கிலோ ரூ.120க்கு விற்பனை ஆனது.

ஒட்டன்சத்திரம், தங்கச்சியம்மாபட்டி, காவேரியம்மாபட்டி, அம்பிளிக்கை, அரசப்பபிள்ளைபட்டி, சாலைப்புதுார் சுற்றியுள்ள பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகமாக பயிரிடப்படுகிறது.

பல மாதங்களாக சின்ன வெங்காயம் கிலோ ரூ.80க்கு குறைவாக விற்பனை ஆனது. சமீபத்தில் பெய்த மழையால் வெங்காயம் விளைச்சல் குறைந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு வரத்தும் குறைந்தது.

கோயில் விழாக்கள், முகூர்த்த நாட்கள், பண்டிகைகள் என அடுத்தடுத்து அமைந்ததால் சின்ன வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது. வியாபாரிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக அறுவடை நடக்கும் இடங்கள், மூங்கில் படல்களில் சேமித்து வைத்திருக்கும் வெங்காயத்தை நேரில் சென்று வாங்குகின்றனர். இதனால் சின்ன வெங்காயம் விலை அதிகரித்து கிலோ ரூ.120க்கு மேல் விற்பனை ஆகிறது.

வியாபாரிகள் கூறுகையில், ‘பல மாதங்களுக்கு பிறகு சின்ன வெங்காயம் கிலோ ரூ.100க்கு மேல் விற்கிறது. வரத்து மேலும் குறையும் என்பதால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

Advertisement