ரேஷன் அரிசி இறக்க வந்த லாரி சிறை பிடிப்பு: உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே புழு நிறைந்த அரிசி வழங்குவதாகக் கூறி ரேஷன் அரிசி இறக்க வந்த லாரியை கிராம மக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா கூ. கள்ளக்குறிச்சி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடைக்கு தேவையான அரிசி மூட்டைகளை இறக்குவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் லாரியில் இன்று (அக்.,30) இரவு 7:00 மணிக்கு கொண்டு வரப்பட்டது.

இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், தொடர்ந்து தரம் இல்லாத புழு நிறைந்த அரிசி வழங்கப்படுவதாகவும், சாப்பிட முடியாத நிலையில் உள்ள அரிசியை விநியோகிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளதாகவும் குற்றம் சாட்டி ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்தனர்.

இதனால் ரேஷன் கடையில் ரேஷன் அரிசி இறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இரவு 8:30 பணி வரையிலும் அதிகாரிகள் யாரும் வராததால் லாரி அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது.

Advertisement