கள்ளக்காதல் பிரச்னையால் முன்விரோதம் வியாபாரி கொலையில் 5 பேருக்கு 'காப்பு'

ஓசூர்: ஓசூரில், கள்ளக்காதல் பிரச்னையால் முன்விரோதம் ஏற்பட்டு, வியாபாரியை கொலை செய்த, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி காடிபாளையத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார், 37. ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் தங்கி, பழைய வாகனங்களை வாங்கி விற்று வந்தார். அக்., 27ம் தேதி, ஓசூர் அந்திவாடி மைதானம் பின்புறம், தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார்.

மர்ம மரணம் என வழக்கு பதிந்து, மத்திகிரி போலீசார் விசாரித்த நிலையில், பிரவீன்குமார் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக, மத்திகிரி காடிபாளையத்தை சேர்ந்த சீனிவாசன், 28, செவன்த் டே பள்ளி அருகே வசிக்கும் ஜிம் கணேஷ், 44, கர்னுார் மாரியம்மன் தெரு திலிப், 26, தின்னுார் வாசவி நகர் கார்த்தி, 35, காடிபாளையம் அபினாஸ், 29, ஆகிய ஐவரை, மத்திகிரி போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைதான சீனிவாசன், மத்திகிரி போலீசாருக்கு கடந்த ஓராண்டாக டீ, காபி வாங்கி கொடுக்கவும், 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' போல், ஸ்டேஷனில் வலம் வந்ததாகவும், அந்த தைரியத்தில் தான் கொலையை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போலீசார் கூறியதாவது:

சீனிவாசன், அவரது மாமா வெங்கடாசலபதி ஆகியோர் வட்டி தொழில் செய்கின்றனர். வெங்கடாசலபதிக்கும், கொலையான பிரவீன்குமார் மனைவிக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன், கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த பிரவீன்குமார், தன் மனைவியை பிரிந்து சென்று விட்டார்.

என் குடும்பத்தை உன் மாமா சீரழித்து விட்டான் என, சீனிவாசனிடம் அடிக்கடி பிரவீன்குமார் கூறியுள்ளார். சமீபத்தில் உன்னை சும்மா விட மாட்டேன் என பிரவீன்குமார் கூறியதால், தன்னை கொலை செய்து விடுவானோ என சீனிவாசன் நினைத்தார்.

தனக்கு ஏதாவது ஆவதற்குள், பிரவீன்குமாரை தீர்த்து கட்டி விட வேண்டும் என முடிவு செய்தார். அதன்படி, அக்., 27ல் பிரவீன்குமாரை, அவரது நண்பர்கள் மூலமாகவே அந்திவாடி மைதானம் பின்புறம் வரவழைத்து, அவரை மது அருந்த வைத்துள்ளார்.

பிரவீன்குமாருக்கு மதுபோதை அதிகமான பின், சீனிவாசனுக்கு போன் செய்து அங்கு வரவழைத்தனர். அங்கு சென்ற அவர், கிரிக்கெட் ஸ்டெம்பால், பிரவீன்குமாரை தலையில் அடித்து கொலை செய்தார்.

கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை கைப்பற்றியுள்ளோம். தலைமறைவான வெங்கடாசலபதியை தேடி வருகிறோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement