முதல்வரே… ஒரு நிமிஷம்… இறக்கைகள் இழந்தவள் நான்!

5

செய்தி: மின்கம்பியால் கரம் இழந்த 12 வயது சிறுமி; வறுமையால் போராட்டமான வாழ்க்கை!

அநீதி: மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கும், தங்குமிடத்திற்கும் அரசின் நடவடிக்கைக்கு காத்திருப்பு!

முதல்வரே... என் எதிர்காலம் பெரும் இருளாய் என்னை பயமுறுத்துகிறது. தங்கள் மூலம் சிறு வெளிச்சம் கேட்கிறேன். நான் கண்மணி; சென்னை, வானகரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் 8ம் வகுப்பு மாணவி. என் அம்மா பாக்யா கவிதா, துாய்மை பணியாளர். நான் மாற்றுத்திறனாளி; ஆனால், பிறப்பில் அல்ல!

ஜூன் 21, 2025; மதியம் 3:00 மணி - எனது திருவேற்காடு வீட்டின் அருகே, தோழி வீட்டு மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது, மாடி சுற்றுச்சுவர் அருகே இருந்த மின் கம்பியில் என் விரல்பட, நான் துாக்கி வீசப் பட்டேன். சென்னை, ஸ்டான்லி மருத்துவ மனையில் ஜூலை 11ம் தேதி, மூட்டுக்கு கீழே என் வலதுகை அகற்றப்பட்டது. இயக்கமற்ற என் இடதுகை மணிக்கட்டுக்கு கீழுள்ள பகுதிக்கு இன்னும் சிகிச்சை தொடர்கிறது.

கே.கே.நகர்., அரசு புனர்வாழ்வு மருத்துவ மனை மூலமாக 'செயற்கை கை' கிடைத்து இருக்கிறது. ஆகஸ்ட் 26, 2025ல், 'அடையாள அட்டை எண்: 83602' மூலம் '75 சதவீத நிரந்தர ஊனம்' என்று, தென்சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சான்றிதழ் அளித்திருக்கிறார். யு.டி.ஐ.டி.,எண்: டிஎன் 5690520140020342 கொண்ட 'தேசிய அடையாள அட்டை'யும் என்வசம் இருக்கிறது. ஆனாலும், இதுவரை மாற்றுத்திறனாளி உதவித்தொகை எனக்கு வரவில்லை.

என்னை கவனித்துக்கொள்ள வேண்டி பணிக்கு செல்ல இயலாத காரணத்தால் வறுமை சூழ்ந்ததை குறிப்பிட்டு, எனது இடது கை உயர் சிகிச்சைக்கும், அரசு விடுதியில் நாங்கள் தங்கிக்கொள்ள அனுமதி அளிக்கவும் ஆட்சியரிடம் என் அம்மா கொடுத்த மனுவுக்கும் இதுவரை பதில் இல்லை.

எங்கள் வாழ்க்கைக்கு 'வெளிச்சம்' தருவீர்களா முதல்வரே?

Advertisement